43 ஆண்டுகளுக்கு பிறகு குவைத் சென்ற இந்திய பிரதமர் - மோடிக்கு உற்சாக வரவேற்பு!
அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு தலைவர்களும், இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ளார். அவருக்கு அந்நாட்டு தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குவைத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். செண்டை மேளங்கள் அடித்தும், கதகளி நடனமாடியும் இந்திய பாரம்பரிய முறைப்படி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, அரபிக்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை, புத்தக வெளியீட்டு நிறுவனம் பிரதமரிடம் வழங்கியது. அதனை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அதில் கையெழுத்திட்டார்.
முன்னதாக குவைத் பயணம் குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், இன்று மாலை நான் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாட உள்ளதாகவும் கூறியுள்ளார்.