கேமிங் துறையில் அசத்தும் இந்திய கேம்கள்: குவியும் கோடிகள்!
நாட்டில் 500 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்கும் இந்திய கேமிங் துறை 2023 ஆம் ஆண்டில் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் இந்த புதிய துறையில் 2025ம் ஆண்டுக்குள் இரண்டரை லட்சம் வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்திய கேமிங் துறையின் அபார வளர்ச்சிக்கு என்ன காரணம் ? இந்த துறையில் அசாத்திய லாபத்தை இந்தியா எப்படி ஈட்டியது ? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்...!
கேமிங் குழந்தைகளுக்கானவை என்று நினைத்த காலம் மாறிவிட்டது. இப்போது கேமிங் என்பது எல்லோருக்குமான பொழுதுபோக்கின் ஒரு அங்கமாக ஆகி இருக்கிறது.
அதிவேக இண்டெர்நெட் வசதிகள் இப்போது எளிதாக கிடைத்துவிட்ட காரணத்தால் கேமிங் துறை இந்தியாவில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.
டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வரும் சூழலில் இந்திய மக்களுக்கும், தொழில்நுட்ப ஆர்வம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் 37 சதவீத அமெரிக்கர்கள் போனில் கேம் விளையாடுகின்றனர் . அதுவே சீனாவில் மற்றும் சீனாவில் 62 சதவீதம் பேர் போனில் கேம் விளையாடுகின்றனர். இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட 90 சதவீத இந்தியர்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி விளையாடுகின்றனர்.
ஆன் லைன் கேமிங் என்பது வெறும் பொழுபோக்காக மட்டும் இல்லாமல், எளிதில் சாத்தியமாகும் ஒரு தொழில் விருப்பமாகவும் மாறியது.
இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதும், இந்தியாவின் கேமிங் துறை, உலகளாவிய கேமிங் துறையில் அழியாத அடையாளத்தை வைக்க தயாராகி கொண்டிருக்கிறது என்று கேமிங் துறை வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். அதற்கு உலக அளவில், இந்திய கேமிங் டெவலப்பர்கள் முத்திரை பதித்து இருப்பத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
2019ம் ஆண்டு தகவலின் படி தென் கொரியாவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் அதிக கேமர்கள் இருக்கிறார்கள்.
2023ம் ஆண்டில் 9.5 பில்லியனுக்கும் அதிகமான கேமிங் ஆப் டவுன்லோட்கள் செய்யப்பட்டுள்ளன என்றொரு தகவலறிக்கை தெரிவிக்கிறது. அதே ஆண்டு, இந்தியாவில் 568 மில்லியன் கேமர்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கேமிங் சந்தையாக இந்தியா மாறியிருப்பதையே இந்த ஆய்வறிக்கை எடுத்துக்கட்டுகிறது.
ஆண்டுக்கு 28 சதவீத வளர்ச்சியுடன் இந்திய கேமிங் துறை முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி, இந்தியாவுக்கு பெருமளவில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதோடு,நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் இந்த துறையில் உண்டாக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உலக அளவில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் இந்த கேமிங் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய அரசு இந்த துறை சார்ந்த வல்லுநர்களை அங்கீகரித்துள்ளது. இந்த துறையை சூரிய உதய துறை என்று மத்திய அரசு குறிப்பிடுகிறது.
சில மாதங்களுக்கு முன் பயல் தாரே, மிதிலேஷ் படங்கர், அனிமேஷ் அகர்வால், நமன் மாத்தூர், அன்ஷு பிஷ்ட் போன்ற இந்தியாவின் கேமிங் டெவலப்பர்களை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு கேமிங் துறை சார்ந்த பயனுள்ள அறிவுரைகளை வழங்கினார். மேலும் ,உலகளாவிய கேமிங் சந்தையில் இந்தியா தலைமை ஏற்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
பிரதமர் சொன்னது போலவே, இப்போது , கேமிங் துறையில் இந்தியா அதிக வருவாய் ஈட்டி முத்திரை பதித்துள்ளது.
கடந்த மார்ச் 22ம் தேதி, சான் பிரான்சிஸ்கோவில் நடந்த கேம் டெவலப்பர் மாநாட்டில் முதல் முறையாக இந்திய கேமிங் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தியா கேம் டெவலப்பர் கான்பரன்ஸ் (ஐஜிடிசி) மற்றும் கேமிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் மீடியா பிளாட்ஃபார்ம் நசராவுடன் இணைந்து கேமிங் தளமான Win ZO அமைத்திருந்த இந்த அரங்கில், ராமாயணம், மகாபாரதம், இதிகாச கதை விளையாட்டுகள், இந்திய சாகச விளையாட்டுகள், மற்றும் கோயில் மற்றும் இந்திய கலாச்சார விளையாட்டுகள், காட்சிப் படுத்தப் பட்டிருந்தன .
இந்திய கேமிங் துறை புதிய சிகரங்களை நோக்கி உயர்ந்து வருகிறது. META நிறுவனத்தின் இந்திய தலைவரான சந்தியா தேவ நாதன், 2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய கேமிங் துறை 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.