கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
Advertisement
நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான கேரள அரசு தரப்பு, நெல்லை மாவட்டத்தில் ஆறு இடங்களில் கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக புற்றுநோய் மருத்துவமனை மற்றும் உணவகம் மீது நடவடிக்கை எடுத்துள்ள கேரள அரசு, கழிவுகளை சேகரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இழப்பீட்டை வசூல் செய்ய கேரளா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தொடர்ச்சியாக நோட்டீஸ் மட்டுமே அனுப்பி வருவதாகவும் கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பு குற்றம் சாட்டியது.
இதை ஏற்ற நீதிபதிகள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு பெறுவதற்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரளா அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.