கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் - காவல்துறை மீது குற்றச்சாட்டு!
கேரளா மருத்துவக் கழிவுகள், நெல்லை அருகே குவியல் குவியலாக கொட்டப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் அதிக அளவிலான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தன. இது தொடர்பாக, சந்தானம் என்பவர் கடந்த நவம்பர் 11 -ஆம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்திலும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், 37 நாட்களுக்கு பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார், புகார் அளித்த நபரால்தான் இந்த கால தாமதமானதாக தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக ஒரு வார்த்தை கூட முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. போலீசாரின் இந்த செயலுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.