கொரோனாவின் போது மருந்து வழங்கிய பிரதமர் மோடி - டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது அறிவிப்பு!
கொரோனா காலத்தில் இந்தியா உரிய நேரத்தில் மருந்து பொருட்களை வழங்கி பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றியதற்காக, டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருதான 'Dominica Award of Honour' எனும் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கரிபியன் கடலில் அமைந்திருக்கும் தீவு நாடான டொமினிகாவுக்கு 70 ஆயிரம் ஆஸ்டிராஜெனிகா தடுப்பு மருந்துகளை வழங்கி இந்தியா உதவியது. அவற்றை பெற்றுக் கொண்ட டொமினிகா, சக கரீபியன் நாடுகளுடன் பகிர்ந்து கொண்டதால் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இந்த நிலையில், இந்தியாவின் செயலை பாராட்டும் வகையிலும், டொமினிகா மற்றும் இந்தியா இடையிலான நட்புறவை பலப்படுத்தும் வகையிலும் பிரதமர் மோடியை கவுரவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருதான, 'Dominica Award of Honour' எனும் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கயானா நாட்டின் ஜார்ஜ் டவுன் நகரில் வரும் 19 முதல் 21-ம் தேதி வரையிலான 3 நாட்களில் இந்தியா-கேரிகோம் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு டொமினிகா காமன்வெல்த் நாட்டின் அதிபர் சில்வானி புர்தன் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார். பிரதமர் மோடிக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமையும் என அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.