கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருவேற்காடு கோயிலில் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவில் நடித்த கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவேற்காட்டில் உள்ள கருமாரியம்மன் கோயிலில், பெண் ஊழியர்களுடன் நடனமாடி வளர்மதி என்ற தர்மகர்த்தா, ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தர்மகர்த்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தர்மகர்த்தா வளர்மதியின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாகவும், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு அவர்
நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளதாகவும், அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, கோயிலில் பக்தியுடன் கரகம் எடுத்து ஆடலாம்; ஆனால் நடனம் ஆடலாமா? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், கோயில்களில் கடவுள் பக்தி உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இறுதியாக, வளர்மதியின் மன்னிப்பை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அத்துடன், ரீல்ஸ் வீடியோவில் நடித்த கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.