கோவையில் பாஜக சார்பில் கருப்பு தின பேரணி - அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணை போவதாக கூறி கோவையில் பாஜக சார்பில் கறுப்பு தினப்பேரணி நடைபெற்றது.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா கடந்த 16 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், உக்கடத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஊர்வலத்துக்கு கண்டனம் தெரிவித்த பாஜக, தமிழ்நாடு அரசு தீவிரவாதிகளுக்கு துணை போவதாக குற்றம்சாட்டியது. தொடரந்து தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை கண்டித்து கோவை காந்திபுரத்தில் பாஜக சார்பில் கறுப்பு தின பேரணி நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணியில் பேசிய அண்ணாமலை, கோவையில் குண்டுவைக்க மைசூரில் இருந்து வெடி மருந்து வாங்கி வந்தவர் பாஷா என்றும் அவரது இறுதி ஊர்வலத்திற்கு காவல்துறை மறைமுக ஆதரவு அளித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக கூறி அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அண்ணாமலை மற்றும் இந்து முன்னனி நிர்வாகிகள் ,பாஜக தொண்டர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.