கோவையில் LPG டேங்கர் லாரி விபத்து - எரிவாயு கசிவால் பள்ளிகளுக்கு விடுமுறை!
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, எரிவாயு கசிந்ததால், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து LPG கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் சென்றது. அப்போது, காந்திபுரம் நோக்கி திரும்பும் பொழுது LPG லாரியில் இருந்த ஆக்சில் துண்டாகி டேங்கர் மட்டும் பயங்கர சத்ததுடன் சாலையில் உருண்டு விழுந்தது.
இதில் டேங்கரில் இருந்து கடும் துர்நாற்றத்துடன் கேஸ் வெளியேறியது. இதனால், அப்பகுதி பொது மக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து கேஸ் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எரிவாயு கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டேங்கர் லாரி, பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டது