கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் தனியார் மதுபான பார்கள் திறப்பு? - அச்சத்தில் பொதுமக்கள் - சிறப்பு தொகுப்பு!
கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டு வருவது கிராம மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் இல்லாததால், அந்த கிராமங்களை குறிவைத்து தற்போது தனியார் மதுபான பார்கள் தொடங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகிய பகுதிகளில் விவசாய பணிகளே பிரதானமாக இருக்கும் சூழலில், அண்மைக்காலமாக ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தனியார் மதுபான பார்கள் தொடங்கப்படுவதால் விவசாயிகளும், விவசாயமும் பாதிக்கப்படக்கூடும் என்று கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கோவை ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் டாஸ்மாக் கடைகளை விட தனியார் பார்கள் அதிகரித்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் விவசாய தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் எனவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் விவசாய தோட்டங்களில் வசிக்கும் மக்களைக் குறிவைத்து கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், தனியார் மதுபான பார்கள் அதிகரிப்பது குற்றச் செயல்கள் அதிகரிக்க மேலும் வித்திடும் என்றும் கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.
மதுபான பார்களால் அடிக்கடி விபத்துகளும் நேரிடுவதால் கிராமங்களில் மதுபான பார்களுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்பதே கிராம மக்களின் கோரிக்கை.......