கன்னியாகுமரி அருகே சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட விவகாரம் - பள்ளிகளில் ஆய்வு!
கன்னியாகுமரி அருகே சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் 2வது நாளாக ஆய்வு நடைபெற்றது.
மேல்புறம் ஊராட்சி அடுத்த குழித்துறையில் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி மற்றும் கிராம தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இரு பள்ளிகளிலும் மதிய உணவில் அழுகிய முட்டை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பள்ளிக் குழந்தைகளுக்கு திமுக அரசு அழுகிய முட்டைகளை வழங்கியுள்ளதாக
குற்றம்சாட்டினார்.
குழந்தைகள் உயிருடன் விளையாடுவதை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் திமுக அரசுக்கு பெற்றோர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியிருந்தார்.
இதன் எதிரொலியாக 2 பள்ளிகளிலும் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அழுகிய முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பள்ளிகளில் ஆய்வு நடைபெற்றது.