சனாதன தர்மத்தை ஒழிப்போம் என கூறியவர்கள் மதச்சார்பின்மை பற்றி பேசுகின்றனர் - தேஜஸ்வி சூர்யா விமர்சனம்!
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியவர்கள் எல்லாம் இன்று மதச்சார்பின்மையை பற்றி பேசிக் கொண்டிருப்பதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் அம்பேத்கரை தோல்வியடைய செய்யும்போது, பாஜக தான் அம்பேத்கரை வெற்றி அடைய செய்ததாக தெரிவித்தார்.
அரசியலமைப்பு மீது தாக்குதல்களை நடத்திய எதிர்க்கட்சிகள் தற்போது அரசியலமைப்பை காப்பது போல நாடகமாடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பல நாட்களாக அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்து பேசியவர்கள் எல்லாம் இன்று அரசியலமைப்பை மதிப்பது போலவும், காப்பது போலவும் எண்ணிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து வருவதாகவும், அவர் தற்போது மதச்சார்பின்மையை பற்றி பேசிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மதச்சார்பின்மையை பற்றி அவர் பேசுவதை நாங்கள் கேட்க போவதில்லை என்றும், அரசியலமைப்பு ஒழுக்கத்தை பற்றி இன்று பேசிக் கொண்டிருக்கும் திமுக-வின் வழிகாட்டியான பெரியார், கடந்த 1957-ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்பட்டதற்காக அவருடைய ஆதரவாளர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டதையும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
தேஜஸ்வி சூர்யாவின் பேச்சை வரவேற்றுள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியலமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறியக காங்கிரஸ் மற்றும் திமுகவை அம்பலப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.