சபரிமலையில் அதிசய தபால் நிலையம்!
இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும், தபால் நிலையம் சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே அமைந்துள்ளது.
மாளிகைப்புரம் கோவில் அருகே, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையம், 1963-ஆம் ஆண்டு மண்டல பூஜை காலமான நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டுமே இந்த தபால் நிலையம் செயல்படும். தபால் அலுவலகங்களில் ஒரே மாதிரியான முத்திரை தான் பயன்படுத்தப்படும். ஆனால், சபரிமலைக்குத் தனி முத்திரை வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் தனி பின்கோடு எண்ணும் உள்ளது.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த தபால் நிலையத்திற்கு, வரும் அத்தனை கடிதங்களும் ஒருவர் பெயருக்கு மட்டுமே வருகின்றன. ஐயப்பனைத் தரிசிக்க முடியாதவர்கள் கடிதங்கள் மூலமாக முறையிடுகிறார்கள். காணிக்கைகளை மணியார்டர் மூலம் அனுப்புகிறார்கள்.
இந்த தபால்களும், மணியார்டர் பணமும் ஐயப்பன் கோவிலில் வைத்துப் பூஜிக்கப்பட்டு தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். மேலும், சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதங்கள் இந்த தபால் நிலையம் மூலம் பக்தர்களுக்கு அனுப்பப்படுகிறது.
தனித்துவ மிக்க சபரிமலை தபால் நிலைய முத்திரை தங்கள் வீடு தேடி வருவதைப் பக்தர்கள் புனிதமாக கருதுகிறார்கள்.
ஐயப்பன் முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகள், இன்லேன்ட் லெட்டர்கள் ஆகியவற்றையும் சபரிமலை யாத்திரை நினைவாகப் பக்தர்கள் வாங்கி செல்கிறார்கள். மகர விளக்குப் பூஜைக்குப் பிறகு இந்த தபால் நிலையம் மூடப்பட்டு விடும். முத்திரைகள் பம்பாவில் தனி அறையில் வைத்துப் பூட்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.