சபரிமலையில் 21 நாட்களில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 21 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த சாதனை நிகழ்ந்துள்ளது.
மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. 2 மாதங்கள் தொடர்ந்து பூஜை நடைபெறும் நிலையில், சிகர நிகழ்ச்சிகளாக வரும் 26ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளன.
நடை திறக்கப்பட்டு தற்போது 21 நாட்களாகியுள்ள நிலையில், சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நேரம் சுமார் 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதேபோல் ஜனவரி 16ம் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கான முன்பதிவும் நிறைவுபெற்றுள்ளது. தினமும் முன்பதிவு மூலம் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் நிலையில், ஸ்பாட் புக்கிங் மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஜனவரி 16ம் தேதி வரை முன்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், முன்பதிவு எண்ணிக்கையை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்கும் திட்டம் எதுவுமில்லை என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்த பக்தர்களின் தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் வரை கோயிலுக்கு வருவதில்லை எனவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.