சரிந்த சிவசேனா சாம்ராஜ்யம் : உத்தவ் தாக்ரே வீழ்ந்தது எப்படி? - சிறப்பு கட்டுரை!
மகாராஷ்ட்ர தேர்தலில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா படுதோல்வி அடைந்திருக்கிறது. இதன்மூலம் உண்மையான மண்ணின் மைந்தர்கள் யார் என்பதை மக்கள் உணர்த்திவிட்டதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எங்கே சறுக்கி எப்படி வீழ்ந்தார் உத்தவ் தாக்ரே? விரிவாக பார்க்கலாம்.
1966-ஆம் ஆண்டு ஒருநாள்... பம்பாய் நகரில் உள்ள பால் தாக்ரேவின் வீட்டில் அவரது தந்தை பிரபோதங்கர், சகோதரர்கள் மற்றும் இன்னும் சிலர் கூடியிருந்தார்கள். காலை 9.30 மணி அளவில் "சத்ரபதி சிவாஜி மகராஜ் கி ஜே" என்று பிரபோதங்கர் முழங்க தேங்காய் உடைக்கப்பட்டு ‘சிவசேனா’ என்ற கட்சி தொடங்கப்பட்டது.
FREE PRESS JOURNAL என்ற பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக இருந்த பால் தாக்ரே 1960-ஆம் ஆண்டு ‘மர்மிக்’ என்ற கார்டூன் வார இதழை தொடங்கினார். ‘மர்மிக்’ என்றால் நையாண்டி என்று பொருள். அதில் பால் தாக்ரே எழுதிய தலையங்கங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
மகாராஷ்ட்ராவில் லட்சக்கணக்கான அந்நியர்கள் ஊடுருவிவிட்டதாகவும் அவர்களால் மராத்தியர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் தாக்ரே முன்வைத்த முழக்கம் இளைஞர்களை கவர்ந்தது. தமது ‘மண்ணின் மைந்தர்கள்’ கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து 1966-ஆம் ஆண்டு சிவசேனா கட்சியைத் தொடங்கினார் பால் தாக்ரே. அப்படியென்றால் சிவாஜியின் சேனை என்று பொருள்.
சிவசேனாவின் முதல் பொதுக்கூட்டம் மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற போது 4 லட்சம் பேர் திரண்டார்கள். ஒரே இரவில் மும்பையின் தனித்த அரசியல் சக்தியாக உருவெடுத்தது சிவசேனா. படிப்படியாக வளர்ந்த அந்தக் கட்சி 1990-க்குப் பிறகு விஸ்வரூபமெடுத்தது. 1995-ஆம் ஆண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட சிவசேனா 73 இடங்களில் வென்று முதன்முறையாக ஆட்சி அமைத்தது.
2003-ஆம் ஆண்டு சிவசேனாவின் செயல் தலைவராக பால் தாக்ரேவின் மகன் உத்தவ் நியமிக்கப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவில் இருந்து விலகிய பால் தாக்ரேவின் அண்ணன் மகன் ராஜ் தாக்ரே, ‘மகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனா’ என்ற கட்சியைத் தொடங்கினார். அதே போல் முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவும் சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
இப்படி சிவசேனாவில் ஏற்பட்ட முதல் பிளவுக்கு காரணமாக இருந்த உத்தவ் தாக்ரேவால் இப்போது அந்தக் கட்சியின் முடிவுரை எழுதப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது மகாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை...
பால்தாக்ரேவின் மறைவுக்குப்பிறகு உத்தவ் தாக்ரேவின் கட்டுப்பாட்டில் இருந்தது சிவசேனா. அவருக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் ஏற்பட்ட மோதலால் 2022-ஆம் ஆண்டு அந்தக் கட்சி இரண்டாக உடைந்தது. பா.ஜ.க.வின் ஆதரவோடு முதல்வரான ஏக்நாத் ஷிண்டேவிடமே கட்சிச் சின்னமான வில் அம்பு சென்றுவிட்டது.
இதனையடுத்து கட்டுக்கோப்பாகவும் ஒற்றுமையாகவும் கட்சியை வழிநடத்த தவறிவிட்டார்..., சின்னத்தை காப்பாற்ற முடியாதவர்... என்றெல்லாம் உத்தவ் தாக்ரேவின் IMAGE DAMAGE ஆனது. மராத்தி பெருமை மற்றும் இந்துத்துவாவை அடிப்படையாகக் கொண்டு மகாராஷ்ட்ர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிவசேனா குடும்பப் பகை, கூட்டணி மாற்றம் மற்றும் வலுவான போட்டியாளர்களால் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்ரே கூட்டணி வைத்ததும் அவரது தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிவசேனாவின் பாதையில் இருந்து உத்தவ் விலகிவிட்டார் என்று கருதிய பால் தாக்ரேவின் ஆதரவாளர்கள் பா.ஜ.க. பக்கம் திரும்பியதால் மகாராஷ்ட்ராவின் இந்து சக்தியாக பாரதிய ஜனதா கட்சி மாறியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தவ் தாக்ரேவின் வீழ்ச்சிக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் வியூகங்களும் முக்கிய காரணம். இந்துத்துவ வாக்கு வங்கியை தங்கள் பக்கம் திருப்பி நகர்புறங்களிலும் கிராமங்களிலும் தனிப்பெரும் சக்தியாக பா.ஜ.க. வளர்ந்திருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
மகாராஷ்ட்ராவின் அரசியல் அடையாளமாக இருந்த தாக்ரே குடும்பம் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை வோர்லி தொகுதியில் உத்தவ்வின் மகன் ஆதித்ய தாக்ரே பெற்றிருக்கும் வெற்றி மட்டுமே அவர்களுக்கு சிறிய ஆறுதல்.