சர்ச்சை கிளப்பிய இசைவாணியின் பாடல்...!
ஐயப்பன் வழிபாடு குறித்து சர்ச்சையை கிளப்பும் விதமாக பாடல் பாடியுள்ள கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பான செய்தி தொகுப்பு..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் கானா பாடகி இசைவாணி, சிறு வயதிலிருந்தே கானா பாடல்களில் அதிக ஆர்வம் கொண்ட இசைவாணி, சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படம் ஒன்றிலும் கானா பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த மார்கழி மக்களிசை இசை நிகழ்ச்சியில் இசைவாணி பாடிய பாடல் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இசைவாணி அந்த நிகழ்ச்சியில் "ஐ ஆம் சாரி ஐயப்பா" என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் ஐயப்ப பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாகவும், ஐயப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்யும் நோக்கத்துடனும் இந்த பாடல் பாடப்பட்டிருப்பதாக, ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்துக்களை இழிவுபடுத்துவதற்காகவே இசைவாணி இந்த பாடலை பாடியுள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த பாடல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாடகி இசைவாணி மீதும், இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
அதில், இந்து கடவுளான ஐயப்ப சுவாமி குறித்தும், அதன் பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் பாடலை வெளியிட்ட நீலம் கலாச்சார மையத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கழுத்தில் சிலுவை அணிந்தபடி இந்து கடவுளை இழிவுப்படுத்தும் விதமாக இசைவாணி பாடியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட இசைவாணி மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!