சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு - கிரிக்கெட் வீரர் அஸ்வின் அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் அறிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா நகரில் நடைபெற்றது. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சக வீரர்களுடன் சேர்ந்து தான் நிறைய நல்ல நினைவுகளை பெற்றுள்ளேன் எனவும் பிசிசிஐ மற்றும் ரோஹித், விராட் கோலி, ரஹானே உள்ளிட்ட சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிசிசிஐ, திறமை, புத்திசாலித்தனம் மற்றும் புதுமைக்கு ஏற்ற பெயர் அஸ்வின் எனவும் இந்திய அணியின் விலைமதிப்பற்ற ஆல்ரவுண்டர் தனது ஓய்வை அறிவித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிமுகமானார். இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உட்பட 3 ஆயிரத்து 506 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் 765 விக்கெட்டுகளையும் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். அதேபோல், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும் 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றி அசத்தியுள்ளார்.