சாதி பேதமின்றி ஒற்றுமையாக கொண்டாடப்படும் கும்பமேளா - பிரதமர் மோடி பெருமிதம்!
கும்ப மேளாவையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
பிரசித்தி பெற்ற மகா கும்ப மேளா நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜ், நாசிக், ஹரித்வார், உஜ்ஜையின் ஆகிய நகரங்களில் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. அந்த வகையில், அடுத்த மாதம் 13-ஆம் தேதி பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா கோலாகலமாக தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய அவர், மகா கும்பமேளா ஜாதி பேதமின்றி ஒற்றுமையாக கொண்டாடப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கும்பமேளாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறிய அவர், காங்கிரஸுக்கு நமது கலாசார விழுமியங்கள் குறித்த புரிதல் இல்லை என விமர்சித்தார்.
இதனிடையே கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் படித்துறையில் பிரதமர் மோடி பால் ஊற்றி வழிபாடு செய்தார்.இதையடுத்து கங்கையில் படகு சவாரி செய்து கும்ப மேளா ஏற்பாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.