சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் - இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என அறிவிப்பு!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என, ஐசிசி அறிவித்துள்ளது.
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு செல்லாத இந்திய அணி, இந்த முறையும் செல்ல மறுத்து விட்டது.
மாறாக, தாங்கள் விளையாடும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கோரிக்கை விடுத்தது. ஆனால் இதனை ஏற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் வேறு நாட்டில் நடைபெறும் எனவும், 2027ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஐ.சி.சி.தொடரிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.