சாரங் நிகழ்ச்சி மூலம் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் - ஐஐடி இயக்குநர் காமகோடி
சாரங் நிகழ்ச்சி மூலமாக நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார நிகழ்வான சாரங் நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 51வது சாரங் நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பயிலரங்கம் நடைபெறவுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் வகையில் சாரங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை கண்டறிந்து ஆண்டுக்கு 32 மாணவர்கள் ஐஐடியில் சேர திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாவும், சாரங் நிகழ்ச்சி மூலமாக நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்களும், வெளிக் கல்லூரி மாணவர்களும் பதிவு செய்து சாரங் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்தார்.