சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் குறையும் பிறப்பு விகிதம் : எலான் மஸ்க் எச்சரிக்கை - சிறப்பு கட்டுரை!
பல ஆசிய நாடுகளில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதை எடுத்துக்காட்டி, இந்த போக்கு தொடர்ந்தால், சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகள் அழிவை சந்திக்க நேரிடும் என டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். காலநிலை மாற்றத்தை விட மிக பெரிய ஆபத்தை இது ஏற்படுத்தும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தொழிற்சாலைகள் முதல் உணவு விநியோகம் வரை, மனிதவளம் குறையும் இடத்தில் எல்லாம் ரோபோக்கள் அடியெடுத்து வைக்கின்றன.
சிங்கப்பூரில் 2030ம் ஆண்டில் 4 பேரில் ஒருவர் 65 வயதானவராக இருப்பார். வயதான தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துமாறு வலியுறுத்தும் அரசு, பணியிடங்களில் ரோபோக்களைப் பயன்படுத்த தொடங்கி உள்ளது என சிங்கப்பூரில் சுருங்கி வரும் தொழிலாளர் சக்தி என்று மரியோ நவ்ஃபல் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், சிங்கப்பூர் மட்டுமில்லை, தென்கொரியா,ஜப்பான்,ஹாங்காங் மற்றும் சீனா ஆகிய ஆசிய நாடுகளும் அழிந்து வருகின்றன என்று பதிலளித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில், சிங்கப்பூர் அதன் மொத்த கருவுறுதல் விகிதத்தில் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.04 ஆகக் குறைந்தது. இது சிங்கப்பூரின் மக்கள்தொகைக்குத் தேவையான 2.1 மாற்று விகிதத்தை விட மிகக் குறைவானதாகும்.
2023ம் ஆண்டு, சிங்கப்பூரின் மொத்த கருவுறுதல் விகிதம் 0.97 ஆக குறைந்தது. இது கருவுறுதல் விகிதத்தில் வரலாறு காணாத வீழ்ச்சியாகும். கடந்த ஆண்டு, சிங்கப்பூரில் கருவுறுதல் விகிதம் முதல் முறையாக 1.0 க்கு கீழே குறைந்துள்ளது.
2030ம் ஆண்டில், சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 24 சதவீதம் பேர் மூத்த குடிமக்களாக இருப்பார்கள் என்றும், ஜப்பான் போன்ற ஒரு "super aged society " ஆக சிங்கப்பூர் மாறும் என்று ஐநா சபை கணித்துள்ளது
சிங்கப்பூரில் 1990 மற்றும் 2005-க்கு இடையில், 25 முதல் 34 வயதுடைய பெண்களிடையே திருமண கருவுறுதல் விகிதங்கள் சரிவை சந்தித்துள்ளது. இருபத்தைந்திலிருந்து 34 வயதுக்குட்பட்ட பெண்கள் தனிமையில் இருக்க விரும்புவதால், பிறப்பு கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. கூடுதலாக, 20 வயதுக்குட்பட்ட பெண்களிடையே திருமண கருவுறுதல் விகிதம் கணிசமான அளவில் குறைந்துள்ளது.
மக்கள்தொகை சார்ந்த சவால்கள் இருந்தபோதிலும், சிங்கப்பூர் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷனில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ரோபோக்கள் மூலம் சமாளிக்கும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச ரோபோட்டிக்ஸ் கூட்டமைப்பு படி, சிங்கப்பூரில் 10,000 தொழிலாளர்களுக்கு 770 தொழில்துறை ரோபோக்கள் உள்ளன. அதிக அளவில் ரோபோக்களை பயன்படுத்தும் நாடுகளில் சிங்கப்பூர் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சிங்கப்பூரில் பொது இடங்களில் (robocops ) ரோபோகாப்ஸ், (robo-cleaner) ரோபோ-கிளீனர்கள், (robo-waiters) ரோபோ-வேய்ட்டர்கள் மற்றும் (robo-dogs) ரோபோ-நாய்கள் பணியில் உள்ளன. மேலும், சிங்கப்பூரின் (Changi ) சாங்கி விமான நிலையத்தில் ஏராளமான ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், தென் கொரியாவும், கடுமையான கருவுறுதல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டில் தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் 8 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், தென் கொரியாவின் மக்கள்தொகை 2100 ஆம் ஆண்டில் பாதியாகக் குறையும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனா மற்றும் ஜப்பானில், 2022 ஆம் ஆண்டில், கருவுறுதல் விகிதங்கள் முறையே 1.09 மற்றும் 1.26 என்ற அளவில் குறைந்துள்ளன. ஜப்பானைப் பொறுத்தவரை, கடந்தாண்டு, பிறந்தவர்களின் எண்ணிக்கையை விட இறந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகும்.
சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. 10 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால், கடைசி குழந்தைக்கு 14 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பேபி போனஸ் வழங்கப்படுகிறது. அதாவது, முதல் மற்றும் இரண்டாவதாகப் பிறந்த குழந்தைகளுக்கு 8,000 முதல் 11,000 டாலர் பரிசு வழங்கப்படும் என்றும், மூன்றாவது குழந்தைக்கு, 10,000 லிருந்து 13,000 டாலர் பரிசு வழங்கப் படுகிறது. இதற்கு சிங்கப்பூர் அரசு வரிச் சலுகையையும் வழங்குகிறது.
ஆசிய நாடுகளில் குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக மக்கள் தொகை குறைந்து வருவது மனித குலத்துக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஒரு சமூகத்தின் கருவுறுதல் விகிதம் 2.1 சதவீதம் குறையும்போது, அந்த சமூகம் பூமியிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்படுகிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.