சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத ஆருத்ரா உற்சவ விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்!
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர், கொடி மரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 12 -ஆம் தேதியும், 13 -ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
இதேபோல், நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் அடுத்துள்ள செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து, கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 12 -ம் தேதி திருத்தேரோட்டமும், 13-ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.