சித்துவிற்கு மருத்துவர்கள் கண்டனம்!
மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த தனது மனைவி, கடுமையான உணவு கட்டுப்பாடுகள் மூலம், 40 நாட்களில் பூரண குணமடைந்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசிய வீடியோ, வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நவ்ஜோத் சித்துவின் மனைவி, என்ன சாப்பிட்டு புற்றுநோயில் இருந்து மீண்டார் ? சித்துவின் கருத்துக்கு புற்றுநோய் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோயின் தாக்கம், 4-ஆவது நிலையில் இருந்த நிலையில், எப்படி பூரண குணமடைந்தார் என்பது குறித்து நவ்ஜோத் சித்து பேசியிருந்தார். சித்து பேசிய வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது மனைவிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டதாகவும், நோயின் தீவிரம் 4ஆவது நிலையில் இருந்தாகவும் உயிர் பிழைக்க 3 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக சித்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அமெரிக்காவில் புற்றுநோய் மருத்துவராக இருக்கும் தனது நண்பரின் மகனிடம் சிகிச்சைக்குச் சென்றதாகவும், அவரும் கவுர் சித்து உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறியதாகவும் சித்து பேசி இருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம், மூன்றரை மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில், மருத்துவச் சிகிச்சைகளை விட்டுவிட்டு உணவு மூலம் புற்றுநோயைக் குணப் படுத்த முடிவு செய்ததாக சித்து அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
தனது மனைவி, தினமும் எலுமிச்சைச் சாறு, பச்சை மஞ்சள், ஆப்பிள் வினிகர், வேப்ப மற்றும் துளசி இலைகள், பூசணி, மாதுளை, நெல்லிக்காய், பீட்ரூட் மற்றும் அக்ரூட் என கண்டிப்பான உணவுகளை எடுத்துக் கொண்டதாக சித்து கூறியிருந்தார்.
மேலும், அதிகாலையில் எழுந்தவுடன் இலவங்கப்பட்டை, கிராம்பு, வெல்லம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை உள்ளடக்கிய மசாலா தேநீர் குடித்ததாகவும், சர்க்கரை, மாவுச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்து விட்டதாகவும் சித்து வீடியோவில் கூறியிருந்தார்.
இவ்வாறு 40 நாட்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டதால், தனது மனைவி புற்று நோயிலிருந்து பூரண குணமடைந்தாக தெரிவித்த சித்துவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
குறிப்பாக, டாடா மெமோரியல் மருத்துவமனை, 262 புற்றுநோய் மருத்துவர்கள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உணவு பழக்க வழக்கங்கள் மூலம் புற்றுநோயில் இருந்து தனது மனைவி குணமடைந்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்து ஆதாரமற்றது மற்றும் இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதது என்றும் கூறியுள்ள மருத்துவர்கள், சித்து அடிப்படையில்லாத மருத்துவ பரிந்துரை செய்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற ஆதாரமற்ற முறைகளை நம்பி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மேற்கொள்ள தாமதிக்க வேண்டாம் என்றும், புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உடனடியாக, புற்றுநோய் மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டாடா மெமோரியல் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு நோயாளிக்கும் நோய் நிலை, உடல் அமைப்பு, உடல் மற்றும் மன வலிமை வேறுபடுவதால், ஆபரேசன், ரேடியேசன் தெரபி, கீமோதெரபி மூலம் மட்டுமே பூரண குணமடைய முடியும் என்று புற்று நோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூடவே, இது போன்ற ஆதாரமற்ற தகவல்களை நம்பி உடல்நலத்தை மேலும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.