சிபிஐ விசாரிக்கலாம் : கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண பெற்று மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், உத்தரவு அமல்படுத்தப்படாததால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளும்படியும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.