For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சிரியாவில் இஸ்லாமிய ஆயுதக் குழு ஆட்சி : இந்தியாவுக்கு பாதிப்பா? - சிறப்பு கட்டுரை!

09:00 PM Dec 10, 2024 IST | Murugesan M
சிரியாவில் இஸ்லாமிய ஆயுதக் குழு ஆட்சி   இந்தியாவுக்கு பாதிப்பா    சிறப்பு கட்டுரை

சிரிய முன்னாள் அதிபர் அசாத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமிய ஆயுதக் குழுவினரின் கையில் சிரியா, இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறுமா? சிரியாவில் ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அரபு நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல், ஆட்சியாளர்களை அகற்றும் புரட்சிகள் வரிசையாக வெற்றி பெற்றுள்ளன. அரபி SPRING எனப்படும் தீவிரவாத ஆயுதக் குழுக்கள், டுனிசியா, எகிப்து, லிபியா, யேமன் போன்ற நாடுகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

இந்த வரிசையில் 13 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் தொடங்கிய இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள், உள்நாட்டு போராகி இப்போது இஸ்லாமிய ஆயுதக் குழு ஆட்சியைப் பிடித்துள்ளது.

இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடாக இருந்தாலும், சிரியாவின் அரசியலமைப்பில் எந்த மதத்தின் பெயரும் இடம் பெறவில்லை. சிரியா ஒரு குடியரசு நாடாகும். மேலும் அரசியலமைப்பு ரீதியாக ஒரு மதச்சார்பற்ற நாடாகும்.

Advertisement

1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்தது. இஸ்லாமிய ஆயுதக் குழுவினர் , தங்கள் புதிய தாக்குதலைத் தொடங்கி வெறும் 11 நாட்களில், சிரிய தலைநகரைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆட்சியை இழந்த சிரிய அதிபர் பஷர் அல் அசாத் நாட்டை விட்டு தப்பியுள்ளனர். அதிபர் பஷார் அல் அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்யா அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் வந்துள்ளதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவின் தலைவர் - அபு முகமது அல்-ஜவ்லானி தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி மாற்றம் நடைபெறும் வரை அனைத்து அரசு துறைகளும் பிரதமரின் மேற்பார்வையில் இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்படும் தலைநகர் டமாஸ்கஸின் மையப் பகுதியில் உள்ள உமையாத் சதுக்கத்தில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்திய மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய குடிமக்கள் சிரியா செல்லவும் தடை விதித்துள்ளது.

இந்தியாவுக்கும் சிரியாவுக்கு இடையே நீண்ட காலமாகவே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. குறிப்பாக அசாத்தின் பதவி காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையயேயான அரசுத்தரப்பு உறவுகள் மேலும் வலிமையாக இருந்து வந்தது. காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை சிரியா ஆதரித்துள்ளது

பாலஸ்தீனிய மற்றும் கோலன் குன்றுகள் மீதான சிரியாவின் உரிமைக் கோரலுக்கு, இந்தியா ஆதரவளித்தது. மேலும் ஐநா சபை கூட்டத்தில், கொண்டு வரப்பட்ட சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடையை இந்தியா ஆதரிக்க மறுத்தது.

மேலும் கொரொனா தொற்றுக் காலத்தில், சிரியா மீதான பொருளாதார தடையை நீக்கச் சொல்லி இந்தியா அழைப்பு விடுத்தது. 2011 ஆம் ஆண்டு அசாத்தின் ஆட்சிக்கு எதிராக நாட்டின் தெற்கில் கிளர்ச்சி தொடங்கியது.இது கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து உள்நாட்டு போராக மாறியது.

சிரியா உள்நாட்டு போரின் போது , பல நாடுகள் சிரியாவைத் தனிமை படுத்தின. அரபு கூட்டமைப்பில் இருந்து சிரியாவை வெளியேற்றிய நிலையிலும் இந்தியா, சிரியாவை கைவிடவில்லை. சிரியாவுடனான அரசு உறவை இந்தியா தொடர்ந்தது. சிரியாவின் தலைநகரில் தூதரகத்தை இந்தியா தொடர்ந்து பராமரித்தது.

2003 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, சிரியா தலைநகரில் இந்திய தொழில்நுட்பத்துடன் பயோ டெக்னாலஜி மையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இது மட்டுமில்லாமல், சிரியாவின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாகும். 2022 ஆம் ஆண்டு சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் மக்தத் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இதனை தொடர்ந்து, உள்நாட்டு போரால் சிதைந்த நாட்டை மறு கட்டமைக்க, சுமார் 280 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை சிரியாவுக்கு இந்தியா அளித்தது.

2016 ஆம் ஆண்டில் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உணவு மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப் பட்டன. கோவிட் காலத்தில்10 மெட்ரிக் டன் மருந்துகளை இந்தியா சிரியாவுக்கு அனுப்பியது.

2023 ஆம் ஆண்டு சிரியா நிலநடுக்கத்தின் போது 30 மெட்ரிக் டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது. மேலும் STUDY IN INDIA திட்டத்தின் கீழ், முதுகலை மற்றும் முனைவர் படிப்புக்காக மொத்தம் 1500 இடங்கள் சிரியா மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிரியாவின் எண்ணெய் துறையில் இந்தியா இரண்டு குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. 2004ஆம் ஆண்டு ONGC மற்றும் IPR இன்டர்நேஷனல் இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுக்கான ஒப்பந்தம் உருவானது. மேலும், சீனாவின் CNPC உடன் இணைந்து ONGC சிரியாவில் முதலீடு செய்துள்ளது.

சிரியாவை உள்ளடக்கிய இந்தியா-வளைகுடா-சூயஸ் கால்வாய், மத்திய தரைக் கடல் - ஐரோப்பா வழி தடத்தை உருவாக்குவதில் அதிக அளவில் இந்தியா முதலீடு செய்துள்ளது. எண்ணெய், அரிசி பருத்தி, மருந்து ஜவுளி, ஆகியவை பெரும் அளவில் இந்தியாவில் இருந்து சிரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிரியாவுடனான இந்தியாவின் நல்லுறவு, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதற்கு ஒரு வழியாக இருந்தது.

சிரியாவில் ஆட்சி மாற்றம், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் என்ன மாதிரியான தாக்கம் அல்லது விளைவை ஏற்படுத்தும் ? இது பற்றிய தெளிவான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இஸ்லாமிய ஆயுதக் குழுவினர் கையில் சிரியாவின் ஆட்சி இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்றே புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Advertisement
Tags :
Advertisement