சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து கிராம மக்களை காப்பாற்றிய இளைஞர் - சிறப்பு தொகுப்பு!
கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வனத்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து, கிராம மக்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய ஒரு தொகுப்பை தற்போது காணலாம்.
Advertisement
கர்நாடக மாநிலம், தும்குரு மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மேற்கொண்ட பலகட்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக கிராம மக்கள் அமைத்த பொறியில் சிறுத்தை சிக்கிய நிலையில், அது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பொறியில் இருந்து விடுவித்தபோது, சுற்றியிருந்த கிராம மக்களை நோக்கி சிறுத்தை பாய முயன்றது. அப்போது அங்கிருந்த ஆனந்த் என்ற இளைஞர் சாதூர்யமாக செயல்பட்டு சிறுத்தையின் வாலைப் பிடித்து இழுத்தார்.
இளைஞருக்கு உதவியாக அங்கிருந்த வனத்துறையினர் சிறுத்தையின் மீது வலையைப் போட்டு அதனை பாதுகாப்பாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கொண்டு சென்று அடர் வனப்பகுதியில் விட்டனர். இந்நிலையில், இளைஞர் சிறுத்தையின் வாலைப் பிடித்து இழுத்து கிராம மக்களின் உயிரை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.