சிறுவர்களுக்கு தேவாரம், திருவாசகம் : சிலிர்க்க வைக்கும் சிவனடியாரின் இறை தொண்டு - சிறப்பு தொகுப்பு!
காஞ்சிபுரத்தில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட இறைபாடல்களை, சிறியவர்கள், பெரியவர்கள் என பாகுபாடினின்றி இலவசமாக கற்பித்து வருகிறார் ஒரு சிவனடியார்... அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்...
கோயிலை நெருங்க நெருங்க காதை நிறைக்கும் இறைதுதிகள், எத்தகைய பரவசத்தை கொடுக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் இந்த சிறுவர், சிறுமிகள்...
கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது அமரேசுவரர் திருக்கோயில். இந்த கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்த சிவனடியார் சுந்தரேசன், கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி சிறுவர், சிறுமிகளுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட இறைதுதிகளை சொல்லிக்கொடுக்கும் ஆன்மிக தொண்டாற்றி வருகிறார்.
வாரந்தோறும் ஞாயிறு அன்று காலை அல்லது மாலை வேளைகளில், அப்பகுதி சிறுவர், சிறுமிகளை வரவழைத்து அவர்களுக்கு இறைதுதிகளை போதித்து வருகிறார் சிவனடியார் சுந்தரேசன். சிறுவர், சிறுமிகளுக்கு ஆர்வம் ஏற்படுத்த அவர்களின் பெற்றோரும் உடன் அமர்ந்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை கற்று வருகின்றனர்.
முதலில் தாளம் தப்பினாலும் தொடர் முயற்சியால் தற்போது 25 பாடல்கள் வரை சிறுவர், சிறுமிகள் கற்றுத் தேர்ந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் சிவனடியார் சுந்தரேசன்.
இளம் தலைமுறையினரிடையே ஆன்மிக பற்று குறைந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், சிறு வயது முதலே அவர்கள் மனதில் இறை நம்பிக்கையூட்டும் முயற்சியை சிவனடியார் சுந்தரேசன் கையில் எடுத்திருப்பது போற்றுதலுக்குரியதுதானே...