சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!
சிவகங்கையில் சேதமடைந்த வீட்டில் தங்கி தவித்து வந்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, சமூக ஆர்வலர்கள் சேர்ந்து புது வீடு கட்டித்தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர்கள் சுப்பையா - ரேவதி தம்பதியர். இவர்களுக்கு தர்ஷினி, தாரணி மற்றும் பாலமுருகன் என 3 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் ரேவதி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு சுப்பையாவும் காலமானார்.
இதனால், அரசு பள்ளியில் படித்து வந்த குழந்தைகள் மூவரும், உறவினர்களின் சிறு உதவிகள் மூலம் அவர்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையில் அவர்களின் வீடு கடும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்தது. ஆனால், தங்க இடமின்றி அவர்கள் மூவரும் அதே வீட்டில், ஆபத்தான சூழலில் வசித்து பள்ளிக்கு சென்று வந்தனர்.
இதையறிந்த சிவகங்கை சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, வாட்ஸ் ஆப் குழுவில் பேசி நிதி திரட்டி, பெற்றோரை இழந்து தனியாக தவித்த குழந்தைகள் மூவருக்கும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீட்டை கட்டிக்கொடுத்தனர்.
இந்த புதிய வீட்டிற்கு குயில் கூடு என பெயரிடப்பட்ட நிலையில், நேற்று காரைக்குடி டிஎஸ்பி உள்ளிட்டோர் முன்னிலையில் புதுமனை புகுவிழா நடத்தி, வீட்டை குழந்தைகளிடம் சமூக ஆர்வலர்கள் ஒப்படைத்தனர்.