சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்!
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : இன்றைய தினம் சென்னையில், தினமலர் நாளிதழ் சார்பில் நடைபெற்ற, ‘நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியில், மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
வஜ்ரம் & ரவி ஐஏஎஸ் சிவில் சர்வீஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநர், ஐயா திரு. P.S. ரவீந்திரன் அவர்கள், பயிற்சியாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மற்றும் தமிழகக் காவல்துறையின் முன்னாள் டிஜிபி திரு. M.ரவி ஐபிஎஸ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், ‘அரசுப் பணி சாத்தியமே’ என்ற தலைப்பில் உரையாடினேன்.
நமது நாடு, வளர்ந்த நாடாக உருவாகும் மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகள், உலக அரங்கில், உற்பத்தி, கல்வி, பொருளாதாரம் என, இந்தியாவுக்கான ஆண்டுகளாக இருக்கப் போகிறது.
இந்த மிக முக்கியமான தருணத்தில், நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு வகிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், இந்த குடிமுறை (Civil Services) அரசுப் பணிகளுக்கான தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரும், குடிமுறை அரசுப் பணியில் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும், நாட்டின் வளர்ச்சியில் என்ன பங்கினை வகிக்கப் போகிறோம் என்பதை நோக்கிய பயணத்தின் முதல் படியை எடுத்து வைத்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும்.
நமது நாடு சுதந்திரம் பெற்ற காலமான 1950களில் இருந்தே, குடிமுறை அரசுப் பணிகள், அழியாக் கனவாக இருக்கிறது. தற்போது நமது நாடு வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. இந்த நேரத்தில், அரசுப் பணிகளில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள், அடுத்த நாற்பது ஆண்டுகள், வளர்ச்சிக்கான பாதையில்தான் பயணம் செய்யப் போகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்துடன் உங்களின் பார்வை எப்படி ஒருங்கிணைந்து பயணப்படுகிறது என்பதைப் புரிந்து தேர்வுக்குத் தயாராக வேண்டும். உங்களைத் தினம் தினம் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அரசுப் பணிகள் என்பது, கற்பதற்கான தொடர் வாய்ப்பு. வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்வீர்கள். நாடு வளர்ச்சிப் பாதையில் இருக்கும்போது, கற்றுக் கொள்ள அதிக வாய்ப்புகள் கிடைக்கும். திறந்த மனதுடன் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டின் எந்த மாநிலங்களிலும் பணிகள் ஒதுக்கப்படலாம். குறிப்பிட்ட மாநிலங்களில்தான் பணி வேண்டும் என்று நினைக்காமல், தங்களை முழுமையாக நாட்டிற்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
வெளி மாநிலங்களுக்குச் சென்றால் அதிகம் கற்றுக் கொள்ள முடியும். எனவே, அதற்குத் தங்களை மனதளவில் தயார் செய்து கொள்ள வேண்டும். பணியில் மன நிறைவு இருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகளில், தோல்வி என்ற வார்த்தை கிடையாது. முழுமையாக அர்ப்பணித்தலும், தயாராதலும், நம்மையே முழுமையாக மாற்றிக் கொள்ளுதலும்தான் இந்தத் தேர்வுகளுக்குத் தயாராவதற்கான பலன்.
கடின உழைப்பு நிச்சயம் பலன் கொடுக்கும். உங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். தேர்வுகளுக்குத் தயாராவது ஒரு அழகான பயணம். இன்னும் சொல்லப் போனால், இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது. ஆனால் ஒரு அரசு அதிகாரியாக வெற்றி பெறுவது கடினம். அடுத்த நாற்பது ஆண்டுகள் அரசு அதிகாரியாக எப்படிப் பணி செய்வீர்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே இந்தத் தேர்வுகள்.
எனவே, அதற்கு இப்போதே உங்கள் மனதைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக, தமிழகம் பல உயர் அதிகாரிகளை நாட்டிற்கு வழங்கியிருக்கிறது. ஆனால் தற்போது ஆண்டுக்கு 4 - 5% தான் தேர்வாகிறார்கள். எப்படி இந்தக் குறைவை நிவர்த்தி செய்ய வேண்டும்? ஏன் உயர் மதிப்பிடங்களில் தேர்வாகும் இளைஞர்கள் தமிழகத்தில் குறைவாக இருக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை ஆராய வேண்டும்.
தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன செய்வது என்ற எதிர்மறை கேள்வியையே மனதிலிருந்து விலக்கி விட வேண்டும். உங்களுடைய மிகச் சிறந்த உழைப்பைக் கொடுக்க வேண்டும்.
நேரத்தை முழுமையாகக் கொடுக்க வேண்டும். எவையெல்லாம் உங்களுக்கு முதன்மைத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் மதிப்பெண் வழங்காதோ, அவற்றை எதையும் செய்யக் கூடாது. துரதிருஷ்டவசமாக, அனைத்தையும் செய்தும், அரசுப் பணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அதனை விடச் சிறப்பான ஒன்று உங்களுக்காகக் காத்திருக்கிறது என்று தான் பொருள்.
தேர்வுக்காகத் தயாராவதில் கிடைக்கும் அறிவு, உங்களுக்கு மேலும் பல வழிகளில் பலனளிக்கும். பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும். உங்கள் மீது சந்தேகப் படாதீர்கள். அழுத்தம் கொடுக்காதீர்கள். எதிர்மறை சிந்தனைகளை விலக்கிக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். உண்மையாக இருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
அரசுப் பணிகளில் தேர்வாகிச் சாதிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இன்று பங்கெடுத்த மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் சாதிக்க வேண்டும். உயர் பதவிகளை வகிக்க வேண்டும். பெரிய உயரங்களை எட்ட வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கு முழு ஆதரவாக இருக்கும் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.