சீனாவில் பரவும் HMPV வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை - இந்திய மருத்துவ சேவை இயக்குனரகம் தகவல்!
சீனாவில் பரவும் HMPV வைரஸ் குறித்த இந்தியர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என இந்திய மருத்துவ சேவை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோவிட்-19 அறிகுறிகளைப் போலவே இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவையே இதன் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.
இந்த வைரஸ், நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், இதன் காரணமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் விளைவாக, சீனாவின் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சேவை இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், சீனாவில் பரவும் வைரஸ், மற்ற வைரஸ்களை போன்று சளியை மட்டுமே உண்டாக்க கூடியது என்றும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்த கூடியது என்றும் மருத்துவ சேவை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.