சீனாவில் மீண்டும் வேகமாக பரவும் வைரஸ் - சுகாதார அவசர நிலை? - சிறப்பு கட்டுரை!
சீனாவில் கொரொனா போன்று ஒரு கொடிய வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், மீண்டும் ஒரு பேரிடர் ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. அது என்ன புதிய வைரஸ்? நோயின் அறிகுறிகள்என்னென்ன ? இந்த வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனாவில் HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோவிட்-19 அறிகுறிகளைப் போலவே இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவையே இதன் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.
இந்த வைரஸ், நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், இதன் காரணமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் விளைவாக, சீனாவின் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்கள் எண்ணிக்கை கூடிவருவதால், சுடுகாடுகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளன.
Influenza A, HMPV, Mycoplasma, pneumoniae, மற்றும் Covid-19, ஆகிய வைரஸ்கள், மேலும் பரவாமல் தடுப்பதற்காக, சீனாவின் நோய் கட்டுப்பாட்டு ஆணையம், கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. பல மாகாணங்களில் வைரஸ் பரவி வருகிறது. எனவே ,சுகாதாரத்துறை நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், சீனாவில் சுகாதார அவசரநிலை பிறப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் குளிர் காலத்தில் வரும் தொற்றுநோய்களுக்கு Influenza A வைரஸ் காரணமாகும். இந்த வைரஸால், குழந்தைகள் முதியவர்கள்,கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா, மூச்சு விடுவதில் பிரச்சனை மற்றும் சைனஸ் ஏற்படுகிறது.
HMPV (Human Metapneumo Virus) என்பது சுவாச வைரஸ் ஆகும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோருக்குக் கடுமையான நிமோனியா காய்ச்சலை உண்டாக்கும். குறிப்பாக, இந்த வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Mycoplasma pneumoniae என்பது ஒரு வகை பாக்டீரியா ஆகும். இந்த வைரஸ் இருமல், மற்றும் தும்மல் மூலம் பரவும் என்று கூறப்படுகிறது. தொடர் இருமல், தொண்டை வலி, மூச்சுச் சோர்வு மற்றும் காய்ச்சல் ஆகியவையே இந்த வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகுறிகளாகும்.
HMPV பரவுவதைத் தவிர்க்க, குறைந்தது சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், கை கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாய் பகுதியைத் தொடவேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
இருப்பினும், இந்த வைரஸ் சீனாவைத் தாண்டி மற்ற நாடுகளிலும் பரவும் ஆபத்து இருப்பதால், அனைத்து நாடுகளும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாஸ்க் அணிவதும், ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதும், சுகாதாரமான சுழலில் இருப்பதும், தான் இந்த மாதிரியான சுவாச தொற்று வராமல் இருப்பதற்கான வழிகளாகும்.
2019ம் ஆண்டு டிசம்பரில் தான் சீனாவின் உகான் நகரில் கொரோனா பெருந்தொற்று முதன் முதலாக தோன்றியது. கொரோனா வைரஸ் பரவமால் தடுக்க ஊரடங்கு போடப்பட்டதால் உலகப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. பல லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோயின.
கொரோனா பாதிப்பிலிருந்தே இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.மீண்டும் சீனாவில் புதிய வைரஸ், மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.