சுக்பிர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி! : வீடியோ வைரல்
பஞ்சாப்பில் பொற்கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பிர் சிங் பாதலை ஒருவர் சுட்டுக் கொல்ல முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் அகாலி தளம் கட்சியை சேர்ந்த சுக்பிர் சிங் பாதல் இருமுறை துணை முதலமைச்சராகவும், பிரோஸ்புர் மக்களவை தொகுதி எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் கடந்த 2015-ல் சீக்கியர்களின் புனித நுாலான குருகிரந்த் சாஹிப்-ன் பக்கங்கள் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் ராம் ரஹிமுக்கு மன்னிப்பு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரங்களை சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகாலி தக்த் விசாரித்தது. அப்போது சுக்பிர் சிங் பாதல் குற்றங்களை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர், அமிர்தசரஸ் பொற்கோவில் உட்பட பல்வேறு குருத்வாராக்களில் உள்ள சமையலறை, குளியல் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அகாலி தக்த் உத்தரவிட்டது. அதன் பேரில் சுக்பிர் சிங் பாதல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், சுக்பிர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அந்நபரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் சுக்பிர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட முயன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.