சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!
சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி, 610 பேர் பலியாகினர். சுனாமி தாக்கியதன் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூரில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, ஏராளமானோர் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமி ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி கடலுக்கு செல்லவில்லை. திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை மீன் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சுனாமி பேரலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும், கடல் மற்றும் மீனவர்கள் பாதுகாக்க வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20 வது ஆண்டாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, ஏாளமான பொது மக்கள் மற்றும் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், கடல் அன்னைக்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பேரிடர்காலங்களில் இருந்து தங்களை பாதுகாக்கவேண்டும் என்று பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் திதி கொடுத்தும், கடலில் பால் ஊற்றியும் மரியாதை செய்தனர். நினைவு ஸ்தூபி மற்றும் இறந்தவர்கள் நினைவிடத்தில் பொது மக்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மௌன ஊர்வலம் நடைபெற்றது.
இதேபோல், பூம்புகார், சந்திரபாடி , திருமுல்லைவாசல், பழையார் மற்றும் வானகிரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை எம்.பி சுதா., பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.