சுமார்1 கோடி வாடிக்கையாளர்களை இழந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் - செல்போன் கட்டண உயர்வு காரணமா?
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான தரவுகளின் படி, கடந்த ஒரு மாதத்தில் 79 லட்சத்து 69 ஆயிரம் சந்தாதாரர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், 14 லட்சத்து 34 ஆயிரம் சந்தாரர்களை பாரதி ஏர்டெல் நிறுவனமும், 15 லட்சத்து 53 ஆயிரம் சந்தாதாரர்களை வோடபோன் ஐடியா நிறுவனமும் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதே வேளையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 8 லட்சத்து 49 ஆயிரம் வாடிக்கையாளர்களை ஈர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 46 கோடியே 37 லட்சம் வாடிக்கையாளர்களையும், பாரதி ஏர்டெல் நிறுவனம் 38 கோடியே 34 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை 9 கோடியே 18 லட்சமாக உயர்த்தியுள்ளது.
மூன்று தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மொபைல் கட்டணங்களை 10ல் இருந்து 27சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியதே வாடிக்கையாளர்கள் இழப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.