சென்னையின் அடிப்படை கட்டமைப்பு சரி செய்யப்படவில்லை! : தமிழிசை சௌந்தரராஜன்
சென்னையின் அடிப்படை கட்டமைப்புகள் சரி செய்யப்படாததால் சிறிய மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பிரதமர் மோடி அவர்களின் திட்டமான 70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல் மற்றும் செட்டிநாடு இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காப்பீடு அட்டையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மழை வந்தவுடனேயே துணை முதல்வர் மாநகராட்சி கட்டிடத்திற்கு செல்வார், சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார், அப்புறம் சென்று விடுவார். பிறகு சிரமப்படுபவர்கள் எல்லாம் நாம் தான்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி அவர்களுடன் விவாதம் செய்ய உதயநிதி, தான் தயார் என்ன சொல்லுகிறார். ஆட்சி நடத்துவது தான் பினாமியில் என்றால் விவாதத்திற்கும் அதேதானா?
ஆட்சி குறித்தே எதுவும் கூறமுடியாதவர் உதயநிதி என்னவென்று விவாதம் செய்வார். பள்ளிக்கரணை, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. சென்னையின் அடிப்படை கட்டமைப்பு சரி செய்யப்படவில்லை.
பெயரை மாற்றி வைப்பது, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது என அனைத்தின் பெயரையும் மாற்றி ஆட்சியை நடத்துகிறார்கள்.
உதயநிதி நாயகர்களுக்கு போட்டியாக இருப்பார் என உலகநாயகன் பெயரையே மிரட்டி உள்ளூர் நாயகனாக மாற்ற வைத்துவிட்டார்கள். கமல்ஹாசன் இப்போது திமுககாரராகவே மாறிவிட்டார்.
சென்னையில் உள்ள பல அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் இடிந்து ஒரு அறையிலேயே 80 முதல் 100 மாணவர்கள் பயில்வதாக ஒரு செய்தி படித்தேன். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உதயநிதியின் புகழ் பாடுவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. துறையை பார்க்க அவர்களுக்கு நேரம் இல்லை.
தூத்துக்குடி மாணவிக்கு மது வழங்கி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண் பிள்ளைகளுக்கு பெண் உடல் கல்வி ஆசிரியரே பயிற்சி செய்யலாம். ஆண், பெண் சமம் என்கிற நாகரிக மாற்றத்தை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். பள்ளிக்கல்வித்துறை பெண் பிள்ளைகளை பாதுகாப்பதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் பள்ளியில் பெண் உடல் கல்வி ஆசிரியர்கள்தான் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்கிற சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்மொழியை வளர்கிறேன் என சொல்லி சொல்லி கட்சியையும், கட்சிகாரர்களையும், கனிமொழியையும் வளர்த்தார்கள்.
கருணாநிதி மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு உழைத்தார் என சொல்லுவது ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அமைச்சர்களை மருது சகோதரர்கள் என முதல்வர் சொல்லியிருக்கிறார். இது மருது சகோதரர்களுக்கு அவமானம்.
பெண்கள் பயிலும் பள்ளிகளில் பெண் அலுவலர்கள் இருந்தால் மிக்க நல்லது. இதற்கு விமர்சனம் வந்தாலும் தாங்கிக்கொள்ள தயார். பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம்..
2026 தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. ஒத்த கருத்து உடையவர்கள் ஒன்று சேர்ந்தால் நல்லது.. பாஜக கூட்டணியில் பல பேர் சேரலாம், திமுக கூட்டணியில் இருந்து சிலர் விலகலாம்.
2026 தேர்தல் வரும்போது திமுகவே அவர்களின் கூட்டணி பலமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.. யாரை தோற்கடிக்க வேண்டுமோ அதை பொறுத்து கூட்டணி அமையும். திமுக, அதிமுக இரண்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அரசியல் சூழல் பொறுத்து அனைத்தும் மாறும்.
2026ல் பலமான கூட்டணி அமைய வேண்டும். அனைவரும் சேர்ந்து உறுதியாக இருக்க வேண்டுமே தவிர உதிரியாக இருக்ககூடாது. உதிரியாக இருந்தால் உதயசூரியனுக்கு வாய்ப்பு வந்துவிடும். தேர்தல் கணக்கு தான் கூட்டணி.
பாஜக பொறுத்தவரை கூட்டணி குறித்து மாநில கட்சியுடன் ஆலோசனை செய்த பிறகு தேசிய கட்சி முடிவு செய்யும் என்றார்.