சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை - சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்!
சென்னையில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் முற்பகல் முதலே கருமேங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், பகலிலேயே முகப்பு விளக்கை எரியவிட்டப்படி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்திருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கனமழையால் விற்பனை பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக, வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அண்ணா நகரில் அதிகப்படியான மழை பெய்துள்ளதாக, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அண்ணாநகரில், ஒரு மணிநேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாளியுள்ளதாக கூறியுள்ளார்.