சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம் - கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில், கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய்த்துறை மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்தினார். இதில், மருத்துவர் பாலாஜிக்கு கழுத்து, முதுகு உள்ளிட்ட7 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவர் பாலாஜியை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு மருத்துவர் பாலாஜி முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது தெரியவந்ததால், ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதாக கைதான விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியன் முன்பு விக்னேஷை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.