சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி - 2 பேர் உயிரிழப்பு!
சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனை அறியாமல் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்படவே,
20க்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த திரிவேதி, வரலட்சுமி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், கெட்டுப்போன உணவு உண்டதால்தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சிலர் பிரச்சனையை திசை திருப்பி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதனிடையே பல்லாவரம் மற்றும் ஆலந்தூரில் குடிநீருடன் கழிவுநீர்
கலந்ததாக கூறப்படும் நிலையில் அப்பகுதிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உணவில் பிரச்சனை இருந்ததாலேயே உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார். அப்போது, குடிநீரில் குளோரின் கலப்பதில்லை எனக்கூறிய செய்தியாளருடன் அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.