சென்னையில் நடைபெற்ற சித்த மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நடைபயணம்!
உலகெங்கும் தமிழர்களின் சித்த மருத்துவத்தை பரப்புவதை நோக்கமாக கொண்டு, சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய நலவாழ்வு நல்லறம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள தெய்வநாயகம் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு நடைப்பயணத்தை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குநர் முத்துக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் செல்வி தாமு, அமெரிக்கா மோர் ஹவுஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜகோபால ஸ்ரீதரன் மற்றும் அமெரிக்க மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 4 மருத்துவ மாணவிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய நலவாழ்வு நல்லற தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் செல்வ சுந்தரம். தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் உலகெங்கும் பரவ தொடங்கியுள்ளதாகவும், அமெரிக்க மோர் ஹவுஸ் மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம் பாடத் திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சித்த மருத்துவம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழர்களின் சித்த மருத்துவத்தை பயின்று வரும் அமெரிக்க அலோபதி மருத்துவ மாணவர்கள், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை தங்களுக்கு கற்றுத்தரும் ஹெல்த் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
சித்த மருத்துவம், யோக மருத்துவம் வாழ்க்கையின் நடைமுறைகளை சிறந்ததாக மாற்றுவதாகக் கூறிய மாணவர்கள், அமெரிக்காவில் மருந்தில்லா சித்த மருத்துவ செயல்முறைகளை கொண்டு சேர்க்க உள்ளதாக கூறினர்.