சென்னை வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள வீடுகள் கணக்கெடுக்க எதிர்ப்பு - குடியிருப்புவாசிகள் போராட்டம்!
சென்னையில் வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்பு தெரிவித்து நூறு அடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சென்னையின் பிரதான ஏரியான வேளச்சேரி ஏரி, 265 ஏக்கர் பரப்பளவு இருந்த நிலையில், தற்போது 55 ஏக்கராக சுருங்கிவிட்டது. மேலும், கழிவுநீர் கலப்பதால் ஏரி மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை தடுத்து நீர்நிலைகளை மேம்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அதிகாரிகள் நீர்பிடிப்பு பகுதி அருகே உள்ள வீடுகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.
இதையொட்டி, வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி, ஜெகநாதபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் 100 அடி சாலையில் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.