சென்னை TO வெள்ளை மாளிகை : AI-ல் அசுர வெற்றி பெற்ற ஸ்ரீராம் கிருஷ்ணன் - சிறப்பு தொகுப்பு!
அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, தாம் பணிக்கு தேர்வு செய்யவிருந்ததாக Zoho CEO ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருக்கிறார். யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தொழில்நுட்ப வளர்ச்சியில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. எனவே அமெரிக்க அதிபராகி உள்ள டிரம்ப், AI தொழில்நுட்பத்தை சீரமைக்கும் கொள்கையை வடிவமைக்க ஒரு குழுவை அமைத்துள்ளார்.
அந்த குழுவில், ஸ்ரீராம் கிருஷ்ணன் மூத்த கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகையின் AI மற்றும் (CYRPTO CZAR) கிரிப்டோ ஜார் என்று அழைக்கப்படும் (DAVID SACKS ) டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.
ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பல முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தொழில்நுட்பக் குழுவில் ஒரு சிறந்த தொழில் நுட்பத் திறமைசாலியை நியமித்துள்ளார் என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
சென்னை SRM பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஸ்ரீராம் கிருஷ்ணனை 2004ம் ஆண்டு தமது Zoho நிறுவனத்தில் பணியில் சேர்க்க விரும்பியதாகவும், அதற்கு முன்பாக அவரை மைக்ரோசாப்ட் நிறுவனம் தேர்வு செய்துவிட்டதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் தன்னுடைய சென்னையில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று 2005ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தன்னுடைய பணியை தொடங்கினார் .
முதன்முதலாக ஸ்ரீ ராம் கிருஷ்ணன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் Windows Azure இன் நிறுவன உறுப்பினராக பணியாற்றினார். Windows Azure-ன் வளர்ச்சிக்கு ஸ்ரீராம் முக்கிய பங்காற்றினார். 2013 ஆம் ஆண்டு, பேஸ்புக்கில் சேர்ந்தார். பேஸ்புக்கின் மொபைல் ஆப் பதிவிறக்க வணிகத்தில் அளவிடுவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கொண்டு வந்தார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் Yahoo, Facebook, Snap, Twitter ஆகிய பல முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 2021ஆம் ஆண்டு, SpaceX, Figma, Scale.ai மற்றும் Andreessen Horowitz போன்ற நிறுவனங்களில் தனிப்பட்ட முதலீட்டாளராக ஸ்ரீராம் கிருஷ்ணன் இருந்தார்.
லண்டனில் உள்ள Andreessen Horowitz நிறுவனத்தின் முதல் சர்வதேச அலுவலகத்தில் தலைமை பொறுப்பில் இருந்தார். முதலீட்டாளரான ஸ்ரீராம் கிருஷ்ணன், இந்திய ஃபின்டெக் நிறுவனமான க்ரெட்டில் ஆலோசகராகவும் உள்ளார்.
தனது மனைவி ஆர்த்தியுடன் இணைந்து ஸ்ரீராம் கிருஷ்ணன் நடத்திய ”ஆர்த்தி மற்றும் ஸ்ரீராம் நிகழ்ச்சி” என்ற PODCAST நிகழ்ச்சி முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களிடம் பிரபலமாக இருந்தது.
Perplexity நிறுவன CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஸ்ரீ ராம் கிருஷ்ணனின் AI ஆர்வத்தையும் புதுமையான அறிவையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்திய புலம் பெயர்ந்தோர் அமைப்பின் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் ஜோஷிபுரா, தேசத்துக்கு சேவை செய்யும் பணியை ஏற்றுக்கொண்டிருக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் இருந்து அமெரிக்க வெள்ளை மாளிகை வரை சென்ற ஸ்ரீராம் கிருஷ்ணன், தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.