செயற்கைக்கோள் இணைப்பு : மீண்டும் சாதித்த இந்தியா - சிறப்பு தொகுப்பு!
விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. SpaDeX என்று அழைக்கப்படும் விண்வெளியில் செயற்கை கோள்களை இணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக இஸ்ரோ நிறைவு செய்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, மிகவும் சிக்கலான விண்வெளித் தொழில்நுட்ப செயல் முறையை வெற்றிகரமாக நடத்திய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் முதல் விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் 20,193 கோடி ரூபாய் செலவில் 2035ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட உள்ளது.
பாரதீய அந்தரிக்ஷ் நிலையம், ககன்யான் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் முக்கிய திட்டமாகும். இதற்கு, ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைப்பதே SPACE DOCKING ஆகும்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, பிஎஸ்எல்வி-சி 60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட SDX01 (CHASER) மற்றும் SDX02 (TARGET ) ஆகிய இரண்டு சிறிய செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. விண்ணில் செலுத்திய சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, சுமார் 220 கிலோ எடையுள்ள SpaDeX திட்டமிட்டபடி, பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
முதலில், கடந்த ஜனவரி 6ம் தேதி செயற்கை கோள்கள் இணைப்பு பரிசோதனையை நடத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 9ம் தேதி, இரண்டு செயற்கைக்கோள்களுக்கு இடையிலான தூரத்தை 500 மீட்டரில் இருந்து 225 மீட்டராகக் குறைக்கும்போது மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. எனவே, இணைப்புப் பரிசோதனை இரண்டாவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இஸ்ரோ மிகுந்த எச்சரிக்கையுடன் இணைப்புக்கான மூன்றாவது முயற்சியை 11ம் தேதி தொடங்கியது.
மூன்றாவது முயற்சியில் செயற்கை கோள்களுக்கு இடையேயான தூரத்தை, 500 மீட்டரில் இருந்து 230 மீட்டர், 105 மீட்டர், 15 மீட்டர், 3 மீட்டர் என இஸ்ரோ படிப்படியாக எளிதாக குறைத்தது. இறுதியாக, ஸ்பேடெக்ஸ் விண்வெளியில் செயற்கை கோள்கள் இணைப்புப் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட Bhartiya Docking System என்ற அமைப்பைப் பயன்படுத்தி இஸ்ரோ விண்வெளியில் செயற்கை கோள்கள் இணைப்பை செய்துள்ளது.
மேலும், விண்ணில் செலுத்திய 15 நாட்களில், நான்காவது முயற்சியிலேயே இஸ்ரோ, புதிய சாதனையை படைத்துள்ளது.
வினாடிக்கு வெறும் 10 மில்லிமீட்டர் வேகத்தில் துல்லியமாக செயல்படுத்தப்பட்ட இந்த செயற்கை கோள்கள் இணைப்பு, விண்வெளித்துறை தொழில்நுட்பங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையை வெளிக்காட்டி உள்ளது. இந்த ஸ்பேடெக்ஸ் வெற்றியின் மூலம், குறைந்த செலவில் தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை இஸ்ரோ நடைமுறையில் நிரூபித்துக்காட்டியுள்ளது.
விண்வெளியில் செயற்கைக்கோள் இணைப்பை வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், அனைத்து விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சந்திரயான்-4, (Bharatiya Antariksha Station )பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் மற்றும் ககன்யான் போன்ற இஸ்ரோவின் எதிர்கால விண்வெளி முயற்சிகளுக்கு இந்த சாதனை வழி வகுக்கிறது என்று கூறியுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் விண்வெளித் திறனை உயர்த்தியதற்காக நாட்டின் ஒட்டுமொத்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.