சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நேரடி பேருந்துகள் நிறுத்தம் - பயணிகள் அவதி!
சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த 8 நேரடி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சேலத்தில் இருந்து கோவில்பட்டி, சிவகாசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு 8 நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளின் இயக்கத்தை தற்போது போக்குவரத்துக் கழகம் நிறுத்தியுள்ளதால் அவதியடைந்துள்ள பயணிகள், மதுரைக்கு சென்று அங்கிருந்து பிற தென் மாவட்டங்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனரிடம், கேட்ட போது வருவாய் இல்லை என பதில் அளித்தார். அரசு பஸ்கள் வருவாய்க்காக இயக்கப்படுகிறதா, பொதுமக்களின் சேவைக்காக இயக்கப்படுகிறதா. என பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படும் என ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அறிவித்தது.
ஆனால் அப்போதைய முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் இயக்கம் இன்னும் துவக்கப்படாமல் உள்ளது.
இதற்கு அதிகாரிகள் தனியார் ஆம்னி பஸ் உரிமையாளரிடம் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவது காரணம் என டிரைவர் கண்டக்டர்கள் புலம்புகின்றனர். அரசுக்கு அவப்பெயரை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாக திமுக ஆதரவு தொமுச தொழிற்சங்கமும் குற்றம் சாட்டி வருகிறது.
தமிழகத்தில் பண்டிகைகள் வரிசை கட்டும் நிலையில் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.