சேலத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்!
சேலத்தில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அல்லிக்குட்டை ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் உடைப்பு ஏற்படாமல் தவிர்க்க உபரிநீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் வீராணம் பிரதான சாலை, பொன்னம்மாப்பேட்டை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் தூக்கத்தை தொலைத்த மக்கள், தங்கள் உடமைகளை பாதுகாக்கும் பணிகளில் இரவு முழுவதும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களை கண்டுகொள்ளவில்லை எனக்கூறி அல்லிக்குட்டை பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் வீராணம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்களுடன் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.