சொல்லி அடிக்கும் இஸ்ரோ! : விண்ணில் செயற்கைக்கோள்கள் இணைப்பு எப்படி நடக்கும்?
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை அடுத்து விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
SpaDeX என்ற Space Docking Experiment எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு பளு தூக்கும் குதிரை என்று அழைக்கப்படும் PSLV C60 ராக்கெட்டில் இரண்டு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்கள், 15வது வினாடியில் SDX02 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி, 476.84 கிலோமீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, 476.87 கிலோமீட்டர் உயரத்தில் SDX01 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான், வரும் 7ம் தேதி, விண்வெளியில் செயற்கைகோள் இணைப்பு சோதனை தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
SpaDeX செலுத்திய பிறகு, 24 உப செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த உப செயற்கை கோள்கள் பூமியிலிருந்து 355 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டன.
குறிப்பாக, இந்தியாவின் முதல் ரோபோட்டிக் விண்வெளி திட்டமாக RRM-TD எனப்படும் ரோபோ கைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், ரோபோ கைகள் விண்ணில் செயல்படும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
வருங்காலங்களில், ரோபோ கைகள், விண்வெளியில் உள்ள செயற்கைகோள்களை எளிதில் பழுதுபார்க்கும் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் Make in India திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில், ஒரு செயற்கைக்கோளின் உள் உந்துவிசை அமைப்புகளைப் பயன்படுத்தி அதன் சறுக்கலைப் பிடிக்கவும், இரண்டு செயற்கைக்கோள்களின் சுழல் நிலைகளைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கிடையேயான 20-கிமீ தூரத்தை பராமரிப்பதையும் இஸ்ரோ உறுதி செய்யும்.
இரண்டு செயற்கை கோள்களும் ஒரே சுற்றுப்பாதையில் தங்கி, இரட்டைக் குழந்தைகளைப் போல ஒரே வேகத்தில் பயணிக்கும்.
உகந்த சூரிய திசையை அடைந்ததைத் தொடர்ந்து, செயற்கைக்கோள்களுக்கிடையேயான தூரம் படிப்படியாகக் குறைக்கப் படும்.
அதாவது, 20 கிலோமீட்டர் இடைவெளியை 5 கிலோமீட்டர் ஆகவும், பின்னர் 1.5 கிலோமீட்டர் ஆகவும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று 5 கிலோமீட்டருக்குள் இருந்தால், இரண்டுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தை அனுமதிக்கும் வகையில் செயற்கைக்கோள்களுக்கு இடையேயான ரேடியோ அலைவரிசை (RF) இணைப்புகள் செயல்படுத்தப்படும்.
இதற்காக, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் ஆய்வகத்தில் பல புதிய சென்சார்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவை, இணைப்பை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
செயற்கைக்கோள்கள் இரண்டும்,1.5 கிலோமீட்டருக்குள் வந்தவுடன் இணைப்பு பணி தொடங்கும்.
CHASER செயற்கைக்கோளில் நீட்டிக்கப்பட்ட வளையம் பின்வாங்கி, TARGET செயற்கைக்கோளை நோக்கி இழுத்து, இரண்டும் ஒரு யூனிட்டாக இணைக்கப்படும்.
இணைக்கப்பட்டவுடன், ஒரு செயற்கைக்கோளிலிருந்து மற்றொன்றுக்கு ஆற்றல் பரிமாற்றம் நடக்கும். முதலில் ஒரு ஹீட்டரை இயக்கி வெற்றிகரமான இணைப்பை இஸ்ரோ உறுதிப்படுத்தும். இந்த முழு பணியும் 15 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SpaDeX வெற்றி, இந்தியாவின் விண்வெளித்துறை வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
சந்திரயான்-4 மற்றும் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் போன்ற எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான முதல் வெற்றி படியாக இந்த படியாக SpaDeX அமைத்திருக்கிறது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை அடுத்து விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.