ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் 'தளபதி' : 8 வயது சிறுமியின் முரட்டுக்காளை - சிறப்பு தொகுப்பு!
ஜல்லிக்கட்டு காளையை ஒரு 8 வயது சிறுமி பராமரித்து, பயிற்சியளித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று பல பரிசுகளை வாரிக்குவித்த அடங்காத காளைதான் இந்த தளபதி. அப்படிப்பட்ட முரட்டுக் காளையை கன்றுக்குட்டியைப்போல் பிடித்து இழுத்து பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் இந்த சிறுமிக்கு வயதோ வெறும் எட்டு.
மதுரை வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களான வினோத் - இலக்கியா தம்பதியரின் மகள்தான் இந்த 8 வயது சிறுமியான யுவஸ்ரீ. தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாடுபிடி வீரராக இருந்த வினோத் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் ஆர்வத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இரு ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கியுள்ளார். ஒரு காளைக்கு தளபதி என்றும், மற்றொரு காளைக்கு புகழ் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
காளைகள் மீது தனக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்த யுவஸ்ரீக்கு அடுத்து பிறந்த தனது 4 வயது மகனுக்கு புகழ் என்று காளையின் பெயரையே வைத்துள்ளார். தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது அதீத ஆர்வம் கொண்ட வினோத் - இலக்கியா தம்பதியர், தங்கள் பிள்ளைகளுக்கு காளை வளர்ப்பு பற்றி சொல்லிக்கொடுத்து வளர்த்து வருகின்றனர்.
இரு காளைகளையும் தங்கள் இரு பிள்ளைகளே வளர்க்க வேண்டும், அவற்றை பராமரிக்க வேண்டும் என்பதே இந்த தம்பதியரின் விருப்பம். அதற்கேற்ப பள்ளி செல்லும் நேரம் போக மீதமுள்ள நேரத்தை தனது காளையான தளபதியுடன் செலவிடுவதை யுவஸ்ரீ வழக்கமாக கொண்டுள்ளார்.
தனது தந்தையின் உதவியுடன் காளைக்கு பேரிச்சம்பழம், கோதுமை தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை போன்ற சத்தான உணவுகளை வழங்குவதில் இருந்து, அதை நடைபயிற்சி, குத்து பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லும் வரை அனைத்தையுமே தொடர்ந்து செய்து வருகிறார் சிறுமி யுவஸ்ரீ.
இந்த சிறுமியின் பாசத்தை உணர்ந்ததால்தானோ என்னவோ, வாடியில் சீறிப்பாய்ந்து எதிரே நிற்ப்பவர்களை மிரட்டி ஓட விடும் முரட்டுக் காளையான தளபதி, சிறுமி யுவஸ்ரீயுடன் இருக்கும்போது மட்டும் சாதுவாக மாறி ஒரு கன்றுக்குட்டியைப் போல் கொஞ்சி விளையாடுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தனது காளைக்கு தீவிரமாக பயிற்சியளித்து வரும் சிறுமி யுவஸ்ரீ, பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளை வென்று தளபதி தன்னை பெருமைப்படுத்தியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
நிச்சயம் வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தளபதி பரிசு வெல்லும் என நம்பிக்கையுடன் கூறும் யுவஸ்ரீயின் தந்தை வினோத், முன்பைப்போல் அனைத்து காளைகளையும், காளையர்களையும் சமமாக நடத்தும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் தந்தை, மகள் காட்டும் இந்த அர்ப்பணிப்பு, இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, ஒரு உணர்வு சார்ந்த கொண்டாட்டம் என்பதை ஆணித்தனமாக நமக்கு உணர்த்துகிறது.