ஜல்லிக்கட்டு போட்டி- ஆன்லைன் மூலம் 5, 347 மாடு பிடி வீரர்கள் பதிவு!
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 632 காளைகளுக்கும், 5 ஆயிரத்து 347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம்தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு நிறைவு பெற்றதாகவும், 3 இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 632 காளைகளுக்கும், 5 ஆயிரத்து 347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்,
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு QR கோடுடன் கூடிய ஆன்லைன் டோக்கன் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
QR கோடுடன் கூடிய டோக்கனை எடுத்துவரும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும்,போலியான டோக்கன்களை கொண்டுவரும் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.