ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் - சிறப்பு தொகுப்பு!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இந்த செய்தி தொகுப்பில்..
தைப் பொங்கல் திருநாள் என்றதும் பொங்கலும், கரும்பும் ஞாபகம் வருகிறதோ இல்லையோ ஜல்லிக்கட்டுதான் அனைவரது கண் முன்பும் வந்து நிற்கும். வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளும், அதன் திமில் மீது ஏறி அடக்கும் வீரர்களின் தீரத்தையும் பார்ப்பதே ஒரு கொண்டாட்டம் தான்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ் பெற்றது எனலாம். இந்தாண்டு பொங்கல் திருநாள் வரும் 14-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அடுத்தநாள் மாட்டுப்பொங்கல். இதனை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்துவதில் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது காளைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.
காளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள விஜயபாஸ்கர் தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறார். பிடிபடாத காளை என்று பெயரெடுத்த கறுப்புக் கொம்பன் காளைக்குச் சொந்தக்காரரும் இவர்தான்.
அதேபோல் வெள்ளைக் கொம்பன் காளையும் அவருக்குப் புகழைத் தேடித் தந்தது. தற்போது அவை இரண்டும் உயிரிழந்துவிட்ட நிலையில், தற்போது சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கொம்பன் 2, கண்ணாவரம் உள்ளிட்ட காளைகளை ஜல்லிக்கட்டில் களமிறக்க உள்ளார் விஜயபாஸ்கர். இதற்காக அவர் தனது தோட்டத்தில் காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார்.
தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிக வாடிவாசல்கள் உள்ளன. இங்கு ஜனவரி முதல் மே மாதம் வரை 120-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு, 30க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு, 50க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக தயாராகி வருவது காளைகளும், மாடுபிடி வீரர்களும் மட்டுமல்ல, இந்த வீர விளையாட்டைப் காண தமிழக மக்களும் தான் என்று கூறினால் அது மிகையாகாது.