ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தல் - ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்!
ஜார்க்கண்டில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு ,இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தார்.
முதலமைச்சர் ஹேமந்த் சோரன், முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன், பாஜக எம்.பி. தீபக் பிரகாஷ், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி உள்ளிட்டோர் வாக்களித்தனர். மதியம் 3 மணி நிலவரப்படி 59.28 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டா ர். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.
இதையடுத்து, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதன் எதிரொலியாக காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு இன்று தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலுக்காக ஆயிரத்து 354 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.