ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எவ்வாறு குற்றமாகும்? : உச்சநீதிமன்றம் கேள்வி
மசூதியில் "ஜெய் ஸ்ரீராம்" என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மசூதியில் "ஜெய் ஸ்ரீராம்" என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் இருவர் மீதான குற்றவியல் விசாரணையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
அப்போது, ஒரு மதம் சார்ந்த குறிப்பிட்ட வார்த்தையையோ அல்லது பெயரையோ முழக்கமிடுவது எவ்வாறு கிரிமினல் குற்றமாகும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மசூதிக்குள் நுழைந்ததாக கூறப்படும் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்தது யார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 503-ன் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் பிரிவு 447-ன் கீழ் குற்றவியல் அத்துமீறல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
பின்னர் மனுவின் நகலை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.