ஜெ.ஜெயலலிதா என்னும் சகாப்தம் - சிறப்பு பதிவு!
தமிழக அரசியல் களத்தில் தலைவர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள். அதில் சிலர் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்கள். அந்த தலைவர்களில் சற்று வித்தியாசமானவர் தான் ஜெயலலிதா... வெகுமக்களின் அன்பைப் பெற்ற அதே வேளையில் சக தலைவர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு துணிச்சலுடன் செயல்பட்டவர். ஆம்... மாற்றுக் கட்சி தலைவர்கள் தொடங்கி மற்ற மாநில முதலமைச்சர்கள் வரை ஏதோ ஒரு வகையில் ஜெயலலிதா, அவர்களுக்கு முன்னோடியாகவே இருந்திருக்கிறார். அந்த வகையில் ஜெயலலிதா என்ற அரசியல் ஆளுமையின் உருவாக்கத்தில் நிகழ்ந்த சில முக்கியமான தருணங்களை தற்போது பார்க்கலாம்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தான் ஜெயலலிதாவின் பூர்வீகம். ஆனால் அவர் பிறந்ததோ கர்நாடக மாநிலம் மைசூரில். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மைசூரில் ஜெயராம் - வேதா தம்பதிக்கு மகளாக பிறந்த ஜெயலலிதாவுக்கு அவரது பெற்றோர் வைத்த முதல் பெயர் கோமளவள்ளி. பின்னாளில் அம்மு என்ற பெயருடனே அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார் ஜெயலலிதா. ஒன்றரை வயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த ஜெயலலிதாவுக்கு நாட்டியத்திலும், இசையிலும் அதீத நாட்டம் இருந்தது.
பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு கல்லூரிக் கல்விக்கு ஜெயலலிதா தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் தான் அவருடைய வாழ்க்கையில் சினிமா தொடர்பு நுழையத் தொடங்கியது.
தமிழ், கன்னடம், தெலுங்கு என 1961ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை 140 படங்களில் நடித்திருக்கும் ஜெயலலிதா, அவருடைய அரசியல் குருவும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆருடன் இணைந்து மட்டுமே 28 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நெருக்கமே அவரை இயல்பாக அதிமுகவுக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்பட்டது.
அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆரால் 1982ல் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஜெயலலிதா அடுத்த ஆண்டிலேயே கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1982ம் ஆண்டு கடலூரில் பெண்ணின் பெருமை எனும் தலைப்பில் ஜெயலலிதா தனது முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது திரைப்படநடிகை என்ற ரீதியில் எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும், தனி நபர் தாக்குதலாலும் கடும் உதாசீனத்திற்கு உள்ளாக்கப்பட்டார் ஜெயலலிதா.
எந்த பத்திரிகைகள் தன்னை உதாசீனப்படுத்தியதோ அதே பத்திரிகைள் பின்னாளில் இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என எழுதின என்பது தனிக்கதை.
1984ல் உடல் நலன் குன்றுவதற்கு முன்பாகவே ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்த எம்.ஜி.ஆரின் நடவடிக்கை கட்சியின் மூத்த தலைவர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவரகள் பலர் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை ஏற்கவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பிய எம்.ஜி.ஆரை சந்திக்க ஜெயலலிதாவிற்கு அனுமதியும் வழங்கப்படவில்லை.
சிறிது காலத்திற்குள்ளாகவே கருத்து வேறுபாடுகளை களைந்த ஜெயலலிதாவை, அதற்கு பின் அதிமுகவிலிருந்து நீக்குவதற்காக நடந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. எந்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதோ அதே ஜெயலலிதாவை ராயபுரத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வைத்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் உரை, முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இருந்த செல்வாக்கை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.
1987ம் ஆண்டு டிசம்பரில் எம்.ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலும், எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என்.ஜானகி தலைமையிலும் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. முன்பே சொன்னது போல ஜெயலலிதாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்த அனைவரும், வி.என்.ஜானகி பக்கமிருந்ததால் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக வி.என்.ஜானகி பொறுப்பேற்கும் சூழல் வந்தது. அவரும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
234 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 97 உறுப்பினர்கள் ஆதரவாக இருந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டதால் ஜானகி தலைமையிலான மாநில அரசை கலைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. 1989ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டது.
தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக ஆட்சியமைத்த நிலையில், ஜெயலலிதா அணி 27 இடங்களிலும், ஜானகி அணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆண்டிபட்டியில் போட்டியிட்ட ஜானகி தோல்வியடைந்த நிலையில், போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
தேர்தல் தோல்வியால் ஜானகி அரசியலில் இருந்து விலகியதால், அதிமுகவை ஒன்றாக்கிய ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தையும் மீட்டு தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவியேற்றார்.
அதே ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் போது ஏற்பட்ட மோதலில் தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டிய ஜெயலலிதா, இந்த அவைக்கு நான் மீண்டும் வருவதென்றால் முதலமைச்சராக மட்டுமே வருவேன் என சபதமிட்டுச் சென்றார். இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு விட அடுத்து நடைபெற்ற 1991 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அந்த சபதத்தையும் நிறைவேற்றினார் ஜெயலலிதா.
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் பெரும்முயற்சி, அதே அதிமுகவை ஆளுக்கட்சியாக அரியணையில் ஏற்றியது. 1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியிலும், ஈரோடு மாவட்டம் காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்தார்.
ஒட்டுமொத்த தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார் ஜெயலலிதா. அன்று தொடங்கிய அவரின் அரசியல் பயணம் அவரின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.
1992ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்த கால கட்டம் அது. மண்டல் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியது தொடர்பான வழக்கில் 50 சதவிகிதத்திற்கு மேலாக இட ஒதுக்கீடு செல்லாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். ஏற்கனவே தமிழகத்தில் ஏற்கனவே 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்த அந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழத்தொடங்கின.
தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித மொத்த இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற உத்தரவின்படி 50 சதவிகிதமாக குறைத்தால் அது நம் மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா.
இட ஒதுக்கீடு கொள்கையில் தமிழ்நாடு மேற்கொண்டிருக்கும் நிலையையும், அதன் நெறியினையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வரை அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, 1993 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி தீர்மானத்தையும் நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து தனி சட்டமுன்வடிவையும் கொண்டு வந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற ஜெயலலிதாவிற்கு சமூக நீதி காத்த வீராங்கனை எனும் பட்டமும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என பல்வேறு டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயத் தேவைகளையும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து முழுமையாக பெறுவது இன்றளவும் சவாலாகவே இருந்து வருகிறது. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதா நடத்திய தொடர் சட்டப் போராட்டங்களின் விளைவாக காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை தர மறுத்து முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தது.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என அறிவித்து சென்னை மெரினா கடற்கரையில் 1993ம் ஆண்டு உண்ணாவிரதத்தையும் தொடங்கினார் ஜெயலலிதா.
மாநிலம் மற்றும் மக்கள் நலன் கருதி ஜெயலலிதா மேற்கொண்ட உண்ணாவிரதம் ஒட்டுமொத்த தேசிய அரசியலையும் தமிழகத்தை நோக்கி திரும்ப வைத்தது. அதிமுகவினர் மட்டுமல்ல ரஜினிகாந்த், கமலஹாசன் என திரையுல பட்டாளங்களும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒன்று திரண்டன. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் முறையாக வழங்கப்படும் என மத்திய அரசு வழங்கிய வாக்குறுதியின் படி ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
தமிழக அரசியல் வரலாற்றில் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் ஜெயலலிதாவை துரத்திக் கொண்டே இருந்தன. 1991 -96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மிகப்பெரிய ஊழல் புகார்களை எதிர்கொண்டது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்ட காரணத்தினால் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்ட அதிமுக, வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பெற்றிருந்தது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கும் தோல்வியே கிடைத்தது.
ஐந்தாண்டுகளுக்கு பிறகு 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் களம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தாலும் அவர் போட்டியிட முடியாத சூழல் நிலவியது. காரணம், ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகளும், கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கில் இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என தெரிந்தும் நான்கு தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா.
எதிர்பார்த்ததை போலவே, அத்தனை மனுக்களும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதிமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா தான் தேர்தலிலேயே போட்டியிடவில்லையே... அவர் எப்படி முதலமைச்சராக பொறுப்பேற்க முடியும் ? அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரை முதல்வராக்கப் போகிறார்கள் ? என்ற குழப்பம் எழுந்தது. ஆனால் ஜெயலலிதாவுக்கு அதில் எந்தவித குழப்பமும் ஏற்படவில்லை.
முதலமைச்சராக பதவியேற்பவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் ஆறு மாத காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகி முதல்வராக தொடரலாம் என்ற விதியைப் பயன்படுத்தி அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியை சந்தித்த ஜெயலலிதா எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை எப்படி முதல்வராக்க முடியும் என விவாதங்கள் கிளம்பிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவை பதவியேற்க அழைப்பு விடுத்தார் பாத்திமா பீவி. இதற்காக பாத்திமா பீவி கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வெளியாக, தமிழக மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார் ஜெயலலிதா.
எனினும் அடுத்த சில மாதங்களில் வழக்குகளில் இருந்து நிவாரணம் பெற்று 2002 ஆம் ஆண்டு ஆண்டிபட்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வராகிய ஜெயலலிதா அந்த ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்தார்.
2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் மிகுந்த பரபரப்பானதாக இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி கைது. பல ஆண்டு காலமாக தமிழக - கர்நாடக வனப்பகுதியில் சந்தன மரக் கடத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட வீரப்பன் கொலை செய்யப்பட்டது, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
2006ம் ஆண்டு ஆட்சியை இழந்தாலும் கடந்த முறை போட்டியிட்ட அதே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றிபெற்றார். ஆளுங்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது போல எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களின் பிரச்னைகளை நாள்தோறும் அறிக்கைகளாக வெளியிடும் வழக்கங்களை கொண்டிருந்தார் ஜெயலலிதா.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஆனால் இந்த முறை ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி மாறியிருந்தது. ஆம் இரண்டு முறை வெற்றியை தேடித்தந்த ஆண்டிபட்டி தொகுதியை விட்டுவிட்டு திருச்சி ஸ்ரீ ரங்கம் தொகுதியை தேர்ந்தெடுத்த ஜெயலலிதா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அப்போது மீண்டும் ஒரு பிரச்னை ஜெயலலிதாவிற்கு வந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தனது சட்டமன்ற பதவியை இழந்த ஜெயலலிதா, பின்னர் அவ்வழக்கிலிருந்து விடுதலையாகி ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியை பதிவு செய்தார்.
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை தன்வசமாக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த அதிமுக, இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் பலருக்கு டெபாசிட் பறிபோனது. அதிமுகவின் வெற்றி பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
மூன்றாண்டு கால அதிமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி என ஜெயல்லிதா பேசினார். அதே நேரத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுமா என்ற கேள்வியை எழுப்பிய போது, பொறுப்புள்ள கட்சியாக செயல்படும் என தெரிவித்து தனது பதிலில் எதிர்க்கட்சி என்ற வார்த்தையை கவனமாக தவிர்த்ததும் விவாதப் பொருளாக மாறியது.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் புலமை வாய்ந்தவராக இருந்த ஜெயலலிதா புத்தகப்பிரியையும், தேர்ந்த எழுத்தாளரும் கூட. தீவிர அரசியல் பயணத்திற்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தமிழ், ஆங்கிலம் இதழ்களில் பல்வேறு கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதி வந்தார்.
சற்று இடைவெளி இருந்தாலும் ஜெயலலிதாவின் வெற்றிப் பயணம் அடுத்தடுத்து ஆண்டுகளுக்கு நீடிக்க, ஏழை, எளிய மக்களுக்காக அவர் செயல்படுத்திய திட்டங்களே காரணமாக அமைந்திருந்தது.அப்படி அவர் கொண்டுவந்த திட்டங்களில் ஒன்று தான் தொட்டில் குழந்தை திட்டம். 1970களுக்கு பிறகு ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆராய்ந்த போது பிறப்பு விகிதம் குறைய ஆரம்பித்தது.
அதே நேரத்தில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் காலத்தில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா.
பெண் குழந்தைகளை வளர்க்க முடியாதவர்கள் மத்தியில் அந்த குழந்தைகளை அரசே வளர்க்கும் என அறிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அத்திட்டத்தை தொடங்கி வைத்தார். எங்கெங்கெல்லாம் இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அங்கெல்லாம் சிசு கொலைகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தன. அந்த பகுதிகளில் ஆண் - பெண் விகிதம் மேம்பட ஆரம்பித்தது.
ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா தொடங்கிய முதல் திட்டமான தொட்டில் குழந்தை திட்டம் அவரை ஐநா வரை பெருமையடையச் செய்தது. அதே போன்று அவர் கொண்டு வந்த மற்றொரு திட்டம் தான் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். இந்த திட்டம் தேசிய அளவில் பெரும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
ஒரு வீட்டில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருந்தால் அப்பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இருவரின் பெயரிலும் தலா 25 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் அத்தொகை வழங்கப்படுவது தான் பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படை நோக்கம். இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடையத் தொடங்கினர்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் மற்றொரு புரட்சிகரமான திட்டம் தான் மகளிர் காவல்நிலையம் அமைக்கும் திட்டம். தமிழகத்தில் பெருகிக் கொண்டிருந்த பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பெண்களின் பிரச்னைகளை தீர்க்கவும் தனி காவல்நிலையம் வேண்டும் என முடிவு செய்த ஜெயலலிதா மகளிர் காவல்நிலையங்களை தோற்றுவித்தார்.
அந்த மகளிர் காவல் நிலையங்கள் தான் இன்றளவும் லட்சக்கணக்கான பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.
அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்காக ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் அத்திட்டங்களே பெண்களின் வளர்ச்சிக்கான குறியீடுகளாக பின்னாளில் கருதப்பட்டன. அதிலும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என இன்றளவும் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இளம்பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டம், எழை, எளிய மக்களின் நலன் கருதி நியாய விலைக்கடைகளின் மூலம் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், திருக்கோயில்களில் ஒருகால பூஜை திட்டம், பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டிகள், மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் அம்மா அழைப்பு மையம், ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் என மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் அவ்வளவு எளிதாக யாராலும் கடந்து விடமுடியாது.
கள்ளாச்சாராயம் ஒழிப்பு, லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை, நில அபகரிப்பு சட்டத்தின் மூலம் பறிக்கப்பட்ட நிலத்தை மீட்டுக் கொடுத்தது, மதமாற்ற தடைச் சட்டம் என ஜெயலலிதாவின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தியதோடு மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தின.
2016 சட்டமன்றத் தேர்தல் ஜெயலலிதாவிற்கு மிக முக்கியமான தேர்தலாக இருந்தது. பல செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பிரபல நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாகவே இருந்தன. இருப்பினும் தன்னம்பிக்கையோடு தேர்தலை எதிர்கொண்ட ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகின. கருத்துக் கணிப்புகள் முற்றிலும் பொய்யாகின. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தார் ஜெயலலிதா. 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் சாதனையை படைத்த ஜெயலலிதாவின் பக்கம் ஒட்டுமொத்த தேசமும் திரும்பியது.
பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் 134 தொகுதிகளை கைப்பற்றி அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதே தேர்தலில் திமுக கூட்டணி 98 தொகுதிகளை கைப்பற்றியது. தமிழகத்தில் மூன்றாவது அணியை உருவாக்கும் நோக்கில் தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய மக்கள் நலக்கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.
பின்னாளில் அந்த கூட்டணி உருவானதன் பின்னணியில் அதிமுக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இப்படியாக ஜெயலலிதாவின் அரசியல் பயணம் பிரம்மிக்கத் தக்க வெற்றியையும், அவ்வப்போது எதிர்பாராத தோல்விகளும் நிறைந்ததாகவே காணப்பட்டன.
இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு, முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற போது முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பை தன்னிடமே வைத்திருந்தார். 1992 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில் ராமர் கோவிலுக்கு ஆதரவான ஜெயலலிதாவின் பேச்சு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான பரஸ்பர நல்லெண்ணத்தையும், இணக்கதையும் உருவாக்கியது.
1993 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் தான், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக ராமஜென்ம பூமி நியாஸ் மஞ்ச் அமைப்பு சார்பில் தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 20 லட்சம் கையெழுத்துகளும் பெறப்பட்டன.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்றுவந்த கட்டாய மதமாற்ற ரீதியான நிகழ்வுகளை கருத்தில் கொண்டு 2002 ஆம் ஆண்டு கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா. குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களில் ஒரு சாராரை ஒட்டுமொத்தமாக கட்டாயப்படுத்தியோ, ஆசை காட்டியோ அல்லது மோசடி செய்தோ மத மாற்றத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பதே அந்த சட்டத்தின் பிரதான நோக்கம்.
தமிழ்நாட்டில் இயற்றப்படும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் எந்த ஒரு மதத்தினருக்கும் அல்லது பிரிவினருக்கும் எதிரானது அல்ல என்பதை தெளிவுப்படுத்திய ஜெயலலிதா, சமுதாய நல்லிணக்க உணர்வை சீர்குலைக்கும் இத்தகையை தீய விளைவுகள் தமிழ்நாட்டில் நிகழக் கூடாது என்ற அடிப்படையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் விளக்கமளித்தார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமர் நரேந்திரமோடியும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனிப்பட்ட முறையில் உற்ற நண்பர்களாக இருந்தனர். குஜராத் முதலமைச்சராக மோடியும், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதாவும் ஒரே கால கட்டத்தில் பதவி வகித்ததோடு இரு மாநில வளர்ச்சிக்காக இருவரும் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டம் ஏராளமானவை. குஜராத் முதல்வராக மோடி பதவியேற்கும் நிகழ்வில் ஜெயலலிதாவும், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் மோடியும் பங்கேற்கும் அளவிற்கு அவர்களுக்கிடையேயான நட்பு நீண்ட ஆண்டு காலம் தொடர்ந்தது.
2013 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதத்தில், மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகி என பெருமிதமாக குறிப்பிட்டிருந்தார்.
மோடி பிரதமரான பின்பு தனக்கான அதிகாரங்களை பயன்படுத்தாமல், போயஸ்தோட்ட இல்லத்திற்கு வருகை புரிந்து ஜெயலலிதாவுடன் கலந்துரையாடினார். புரோட்டோ கால் மரபுப்படி தன்னை விட அதிகாரம் குறைந்த முதல்வரான ஜெயலலிதாவை வீடு தேடி சென்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவர்களுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.))
2016 தேர்தல் வெற்றியின் மூலமாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா. தமிழகத்தில் 500 மதுபானக்கடைகள் குறைக்கப்படும் என்ற ஜெயலலிதாவின் கையெழுத்து தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆறாவது முறையாக பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள்ளாகவே ஜெயலலிதாவின் உடல் நிலை குன்றத் தொடங்கியது.
செப்டம்பர் 22 ஆம் தேதி... இரவு 11 மணி... போயஸ்கார்டனுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நுழைகிறது. மயக்கமடைந்த நிலையில் ஜெயலலிதா அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இந்த செய்தி தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தீயாக பரவுகிறது. கிராமம் தொடங்கி நகரம் வரையிலான அதிமுக தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அடுத்தநாள் விடிவதற்குள் மருத்துவமனை இருக்கும் சாலைகள் முழுவதும் தொண்டர்களின் கூட்டமாகவே இருந்தது.
ஜெயலிதாவிற்கு என்ன ஆயிற்று ? அவரின் உடல் நிலை தற்போது எப்படி இருக்கிறது ? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தொண்டர்களின் மனதில் ஓடிக்கொண்டே இருந்ததை அவர்களின் கண்களில் வடிந்த கண்ணீர் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. மூத்த தலைவர்கள் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த தனியார் மருத்துவமனையிலேயே முகாமிட்டனர்.
இரண்டு நாட்களுக்கு பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவக் குறிப்பு வெளியானது. அதில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் மருத்துவமனையை விட்டு செல்ல வழியின்றி வாசலிலேயே தொண்டர்கள் அனைவரும் தங்கியிருந்து ஜெயலலிதா குணமடைய பல்வேறு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
மருத்துவமனையில் இன்று வீடு திரும்புவார், நாளை வீடு திரும்புவார் என எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏமாற்றம் அளிக்கும் நாளாகவே இருந்தது. ஆளுநர், மத்திய அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் நாள்தோறும் மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரித்துச் சென்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு போதாது எனக்கருதி லண்டனில் இருந்து பிரபல மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும் வரவழைக்கப்பட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றன. அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கையெழுத்திட வேண்டிய இடங்களில் அவரது இடது கை பெருவிரல் ரேகை பதிக்கப்பட்டிருந்தது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் பின்னாளில் அது ஏற்றக்கொள்ளக்கூடியது தான் என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் சர்ச்சைகள் ஓய்ந்தன.
மூன்று தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடியே காவிரி ஆணையம் தொடர்பாகவும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாகவும் அரசே செய்திக்குறிப்பு வெளியிட்டது. இப்படியாக ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டே இருந்தன. ஒவ்வொரு மூன்று தினங்களுக்கும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியானதே தவிர இறுதிவரை அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வரவில்லை.
டிசம்பர் 4 ஆம் தேதி இரவு திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு மூத்த அமைச்சர்கள் விரைந்தனர். காவல்துறையினர் குவிக்கப்படுகிறார்கள். ஜெயலலிதாவிற்கு ஏதோ ஆகிவிட்டது என்ற பதற்றம் தமிழகம் முழுவதும் பரவியது. ஜெயலலிதாவின் உயிர் பிரிந்து விட்டதாக செய்திகள் கசிய, மருத்துவமனையை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்களின் கதறல் சத்தம் சென்னை மாநகர் முழுவதுமே கேட்கும் அளவிற்கு இருந்தது.
அடுத்த நாள் அதாவது டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜெயலிதாவின் இறப்பு அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பொதுமக்கள் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
சென்னை ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு பின் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மைசூரில் தொடங்கிய சகாப்தம் மெரினா கடற்கரையில் முடிவுக்கு வந்தது .
ஜெயலிதா உயிரோடு இருந்தவரை எவ்வளவு சவால்களையும், சோதனைகளையும் கடந்தாரோ அதைவிட அவர் உயிரிழந்த பின்பு சந்திக்க வேண்டியிருந்தது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமிருப்பதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணையும் நடைபெற்று அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அனால் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.
எந்தவித பின்புலமின்றி சினிமாவில் கால் பதித்து அங்கே தொட்ட உச்சத்தை விடவும் புகழுக்காக இல்லாமல் மக்கள் பணிக்காக அரசியலில் கால் பதித்து ஆறு முறை தமிழக முதலமைச்சராக அதிரடி காட்டிய இரும்பு பெண்மணி தான் தமிழக மக்கள் அனைவராலும் இன்றளவும் அம்மா என்று அழைக்கப்படுகிறார். எத்தனையோ வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றிருந்தாலும் தமிழக மக்களால் அன்போடு அம்மா என்று அழைக்கப்படுவதையே தன் பாக்கியமாகவும் அவர் கருதினார்.
மக்களால் நான்... மக்களுக்காகவே நான் என்ற மந்திரச் சொல்லால் ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பதோடு, ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் போர்க்களத்தில் தனி ஒரு பெண்ணாக போராடி தனக்கென தனி முத்திரை பதித்த ஜெயலலிதாவின் புகழ் எந்நாளும் நிலைத்து நிற்கும்.